பார்க்கிங் விமர்சனம்!

ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம் எஸ் பாஸ்கர், ரமா ராஜேந்திரா, பிரதனா நாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்க, அறிமுக  இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருக்கும் படம், பார்க்கிங்.

ரிட்டையர் ஆகும் வயதினை நெருங்கிக் கொண்டிருக்கும் நேர்மையான, கண்டிப்பான அரசு அதிகாரி, எம் எஸ் பாஸ்கர். பல வருடங்களாக ஒரு வாடகை வீட்டின் கீழ் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் குடியிருக்கும் அதே வீட்டின் மேல் தளத்தில், தனது கர்ப்பினி மனைவி இந்துஜாவுடன் புதிதாக குடி வருகிறார்,  ஐ டி யில் வேலை பார்க்கும் ஹரிஷ் கல்யாண்.

ஹரிஷ் கல்யாண், எம் எஸ் பாஸ்கர் இவர்கள் வசித்து வரும் அந்த குடியிருப்பில், ஒரு கார் மட்டுமே நிறுத்துவதற்கான இடம் இருக்கிறது. அந்த இடத்தில், எம் எஸ் பாஸ்கர் தனது பைக்கினை நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் புதிதாக கார் வாங்கிய ஹரிஷ் கல்யாண், அந்த இடத்தினை பயன்படுத்தி வருகிறார். இதனால், தனது பைக்கினை சிரமப்பட்டு நிறுத்தும் சூழ்நிலை எம் எஸ் பாஸ்கருக்கு ஏற்படுகிறது. ஒரு நாள் எம் எஸ் பாஸ்கர் பைக்கினை நிறுத்தும் போது, அவர் அறியாமலேயே காரில் கீறல் ஏற்பட்டு விடுகிறது. இந்த கீறல் காரணமாக இருவருக்குள்ளும் கொஞ்சம் கொஞ்சமாக பகை உருவாகி, ஒருவரையொருவர் கொலை செய்யும் அளவிற்கு செல்லும், அவர்களிடையே என்ன நடந்தது? என்பதே, பார்க்கிங் படத்தின் விறுவிறுப்பான, தெளிவான, ஒரே நேர்க்கோட்டில் செல்லும் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

ஐ டி யில் வேலை செய்யும் இளைஞர் ஈஸ்வர் கதபாத்திரத்தில், நடித்திருக்கும் நாயகன் ஹரிஷ் கல்யாண், சிறப்பான நடிப்பினை கொடுத்துள்ளார். கதாபாத்திரத்தினை உணர்ந்து, உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்திருப்பது சிறப்பு. மனைவி இந்துஜாவுடனான காட்சிகளிலும், எம்.எஸ்.பாஸ்கரை அவரது அலுவலகத்திற்கு சென்று பழி தீர்க்கும் காட்சியிலும், போலீஸ் ஸ்டேஷனில் தன் மீது சுமத்தப்படும் பாலியல் குற்றச்சாட்டால் செய்வதறியாது திகைக்கும் காட்சியிலும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஹரிஷ் கல்யாணின் மனைவியாக நடித்திருக்கும் இந்துஜாவும், சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். படம் முழுவதும் கர்ப்பினியாக நடித்ததுடன் அந்த கதாபாத்திரற்திற்கு என்ன தேவையோ அதை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

ரிட்டையர் ஆகும் வயதினை நெருங்கிக் கொண்டிருக்கும், அரசு அதிகாரியாக எம்.எஸ்.பாஸ்கர், படத்தின் முக்கியமான மிகப்பெரிய கதாபாத்திரம். இளம்பரிதி என்ற கதாபாத்திரமாகவே மாறிப்போயிருக்கிறார். தெனாவெட்டான நேர்மையான அதிகாரி, அவருக்குள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும் வன்மம், தன்னுடைய நேர்மையையும், மானத்தினையும் காக்க, எந்த எல்லைக்கும் செல்லும் கதாபாத்திரமாக உருவகப்படுத்தி நடித்திருப்பதில் எம் எஸ் பாஸ்கர் சூப்பர். மிரட்டிவிட்டார்!

எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருக்கும் ரமா ராஜேந்திரா, இவர்களது மகளாக நடித்திருக்கும் பிரதனா நாதன்,  வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் இளவரசு, இன்ஸுரன்ஸ் ஏஜன்ட் சுரேஷ், இஸ்திரி கடைக்காரர் என ஒவ்வொருவருமே சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.

இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணின் நேர்த்தியான திரைக்கதையாக்கம், படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை, கதையை விட்டு விலகாமல் செல்வதால் பரபரப்பும், விறுவிறுப்பும் ரசிகர்களை ரசிக்க செய்கிறது. எம் எஸ் பாஸ்கரின் அலுவலகத்தில் நடக்கும் சோதனை திக்.. திக்.. நிமிடங்கள். இதைப்போல் இன்னும் சில காட்சிகள். அதேபோல் ஒவ்வொரு கதாபாத்திரமும், அந்தந்த கதாபாத்திரத்தின் தனித்தன்மையிலிருந்து விலகாமல் உருவாக்கப்பட்டிருப்பதே, மிகச்சிறப்பு. இந்த கதாபாத்திரத்தின் வடிவமைப்பினால், நடிகர்களின் பங்களிப்பு மேம்படுகிறது.  எம் எஸ் பாஸ்கர் – ஹரிஷ் கல்யாண் இருவருக்குமிடையே, சின்னப்பொறியாக உருவாகும் சின்ன பிரச்சனை, கொஞ்சம் கொஞ்சமாக விஸ்ரூபம் எடுப்பது போன்ற காட்சிகள் படத்தின் பலம்.

ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னியின் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜின் படத்தொகுப்பு, சாம் சி எஸ்ஸின் இசை, இந்த மூன்றும் ஒருங்கிணைந்து, இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணின் திரைக்கதைக்கு பெரிதும் உதவியிருக்கிறது. யூகிக்க கூடிய ஒரு சில காட்சிகளை மட்டும் தவிர்த்து விட்டுப்பார்த்தால், படத்தில் பெரிதாக குறைகள் இல்லை!

மனித உளவியல் படி, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் (மன அழுத்தத்தின் எல்லை) இருக்கும். அந்த பிரேக்கிங் பாயிண்டை ட்ரிக்கர் செய்தால், எப்பேற்பட்ட மனிதனும் மிருகமாவான்! என்ற கூற்றினை எடுத்துக்கூறிய இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், சகிப்புத் தன்மையினால் அதை தவிர்க்கலாம், என்பதை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.