‘பம்பர்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எம். செல்வகுமார் இயக்கத்தில், நடிகர் அருள்நிதி மற்றும் இயக்குநர் அமீர் முதன்முறையாக இணைந்து நடிக்கும் புதிய எமோஷனல் ஆக்ஷன் டிராமா திரைப்படமான ‘வேட்ட சாமி’ (Vetta Saami) படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்பொழுது இறுதிக்கட்டப் பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றன. 7 மைல்ஸ் பெர் செகண்ட் புரொடக்ஷன்ஸ் (7 Miles Per Second Productions) நிறுவனத்தின் சார்பில் சாமுவேல் மேத்யூ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் (Glimpse) காணொளி தற்பொழுது வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
திரைத்துறையின் முன்னணி இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுப் படக்குழுவினரை வாழ்த்தியுள்ளனர். தமிழ் சினிமாவில் வழக்கமாக வரும் கமர்சியல் கதாநாயகி கதாபாத்திரம் ஏதுமில்லாமல், முழுக்க முழுக்க கதையையும், அதன் அழுத்தமான கதாபாத்திரங்களையும் மட்டுமே மையப்படுத்தி நகரும் ஒரு புதுமையான பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.
நெல்லை மாவட்ட பகுதியின் பெரும் காவல் தெய்வங்களான சங்கிலி பூதத்தார், சுடலை மாடன் உள்ளிட்ட குலதெய்வ வழிபாடுகளையும், அதன் வாழ்வியல் பின்னணியையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. சாதி மற்றும் மத வேறுபாடுகளைத் தாண்டி, தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் சில முக்கியச் சமூகப் பிரச்சினைகளை, மக்களின் இரத்தமும் சதையுமான எதார்த்தமான வாழ்க்கைக்குள் சென்று மிக ஆழமாகப் பதிவு செய்யும் ஒரு ஆக்ஷன் எமோஷனல் டிராமாவாக ‘வேட்ட சாமி’ உருவாகியுள்ளது.
இப்படத்தின் அண்மையில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், நாயகன் அருள்நிதி சாமி வந்து ஆவேசமாக ஆடும் ஒரு உக்கிரமான தோற்றத்தில், தீவிரமான பார்வையுடன் காட்சியளித்து ரசிகர்களை மிரட்டியுள்ளார். அதன் பின்னணியில் காட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான காவல் தெய்வச் சிலையும், பாரம்பரிய நாட்டுப்புறக் கலை நிகழ்வுகளும் இப்படத்தின் அசல் கிராமிய மற்றும் ஆன்மிகப் பின்னணியை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன.
அதேபோல், ‘வேட்ட சாமி’ படத்தின் கிளிம்ப்ஸ் காணொளியானது, புகழ்பெற்ற வில்லிசை கலைஞர் மாதவியின் கம்பீரமான குரலில் தொடங்கி, பாரம்பரிய தெய்வ வழிபாட்டின் வழியாக அருள்நிதி மற்றும் அமீர் ஆகியோரின் கதாபாத்திரங்களை மிக நேர்த்தியாக அறிமுகப்படுத்துகிறது. கிராமிய வாழ்வியலுடன் ஆன்மீக உணர்வையும் கலந்து அமைக்கப்பட்டுள்ள இந்த விறுவிறுப்பான கிளிம்ப்ஸ், சமூக வலைதளங்களில் தற்பொழுது கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்படத்தில் ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பேராடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி, இயக்குநர் தமிழ், கவிதா பாரதி, அயாஸ் கான், டி எஸ் கே, ஓ.ஏ.கே. சுந்தர் மற்றும் அர்ஜய் உள்ளிட்ட ஒரு மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே முக்கியக் கதாபாத்திரங்களில் களம் இறங்கியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் கை கோர்த்துள்ளனர். படத்திற்குத் தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் (Ghibran) உணர்வுப்பூர்வமாக இசையமைக்க, நட்சத்திர ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர் (R.D. Rajasekhar) தனது கேமரா கோணங்களால் நெல்லை மண்ணின் எதார்த்தத்தை அப்படியே படம்பிடித்துள்ளார். தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் ரூபன் (Ruben) இப்படத்தின் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இவர்களுடன் கலை இயக்குநராக ஜி. துரைராஜ் பணியாற்ற, திரையரங்குகளை அதிரவைக்கும் சண்டைப் பயிற்சிக் காட்சிகளைச் சிறுத்தை கணேஷ் கவனித்துள்ளார்.
தற்பொழுது இப்படத்தின் அத்தனை படப்பிடிப்புப் பணிகளும் நூறு சதவீதம் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் காட்சிகள் படத்தின் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்கள் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு எகிறச் செய்துள்ளன. அருள்நிதி – அமீர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த ‘வேட்ட சாமி’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் ஒரு புதிய சரித்திர சாதனையைப் படைக்கும் என்று திரையுலக வர்த்தகப் பகுப்பாய்வாளர்கள் பலத்த நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.