ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

‘மீசைய முறுக்கு 2’,  இசைக்கு மிக முக்கியத்துவம் அளித்து உருவாகும் இத்திரைப்படம், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகித் தமிழ் இளைஞர்களின் பாப்-கலாச்சாரத்தை மாற்றி அமைத்த ‘மீசைய முறுக்கு’ முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இன்றைய அதிநவீன தலைமுறையினரின் ரசனைக்கு ஏற்ற வகையில் காதல், நட்பு, நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் உற்சாகமான அக்மார்க் இசை என அனைத்து அம்சங்களையும் கொண்ட ஒரு முழுமையான கமர்சியல் பொழுதுபோக்குத் திரைப்படமாகத் தயாராகியுள்ளது.

‘மீசைய முறுக்கு 2’படத்தின் இசைக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே’, ‘கோயிந்தம்மா’, ‘அடி போடி’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே சார்ட் பஸ்டர்களாக மாறி யூடியூபை ஆக்கிரமித்துள்ளன. அதனைத் தொடர்ந்து தற்பொழுது படத்தின் 5-வது சிங்கிளான ‘கலைவாணியே’ என்ற திருமணப் பாடல் வெளியாகியுள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் வரிகளில், கௌஷிக் கிருஷ்ணா, டி. சத்யபிரகாஷ் மற்றும் ஆதி இணைந்து பாடியுள்ள இப்பாடலில், ஹிப்ஹாப் தமிழா மற்றும் ரம்யா ரங்கநாதன் கதாபாத்திரங்களின் திருமண நிகழ்வு மிகவும் ரசனையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இப்படத்தின் மூலம் ஹிப்ஹாப் தமிழா ஆதி தனது அசாத்திய பன்முகத்திறமையால் கதை, திரைக்கதை, இயக்கம், இசை மற்றும் முதன்மைக் கதாபாத்திர நடிப்பு என ஐந்து முக்கியப் பெரும் பொறுப்புகளைத் தோள்களில் சுமந்துள்ளார். அவருக்கு ஜோடியாகச் சைத்ரா ஜே. ஆச்சார், கெட்டிகா சர்மா மற்றும் ரம்யா ரங்கநாதன் ஆகிய மூன்று முன்னணி நாயகிகள் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் ஹர்ஷத் கான், மூத்த நடிகர்கள் கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன் மற்றும் நகைச்சுவை நடிகர் ஷா ரா உள்ளிட்ட ஒரு மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே முக்கியக் கதாபாத்திரங்களில் களம் இறங்கியுள்ளனர்.

முதல் பாகத்தின் இசை மற்றும் இளைய தலைமுறையினருடன் ஒன்றிணைந்த அதன் மெகா வெற்றியைத் தொடர்ந்து, ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் பாடல்களும் தற்பொழுது அந்த எதிர்பார்ப்பை பன்மடங்கு எகிறச் செய்துள்ளன. இசை, காதல், நட்பு, குடும்பம், நகைச்சுவை மற்றும் கொண்டாட்டம் என அனைத்து வர்த்தக அம்சங்களையும் நேர்த்தியாக ஒருங்கிணைத்து உருவாகியுள்ள இத்திரைப்படம், தியேட்டர்களில் வெறும் ஒரு சாதாரணத் திரைப்பட அனுபவத்தைத் தாண்டி, உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் பான்-இந்திய இசைக் கொண்டாட்டமாக (Musical Festival) அமையும் என்று திரையுலகினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.