Asuraguru – Review
விக்ரம்பிரபு, மஹிமா நம்பியார், நாகிநீடு, சுப்பாராஜூ, யோகி பாபு, ஜெகன் ஆகியோர் நடித்துள்ள ஆக்ஷன், க்ரைம், த்ரில்லர் படம், ‘அசுரகுரு’. JSB Film studios சார்பாக சதிஷ் தயாரித்துள்ள இந்தப்படத்தினை எழுதி, இயக்கியிருக்கிறார், அறிமுக இயக்குனர் ராஜதீப். கபிலன் வைரமுத்துவும், சந்துரு மாணிக்கவாசகமும் வசனம் எழுதியிருக்கிறார்கள். எப்படி இருக்கிறார் அசுரகுரு?
ரிசர்வ் வங்கியிலிருந்து, கிளை வங்கிக்கு ரயிலில் அனுப்பப்படும் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடிக்கிறார், விக்ரம் பிரபு. அதேபோல் ஹவாலா உலகின் தாதா நாகிநீடுவிடமிருந்தும் கொள்ளையடிக்கிறார். இதனால் போலீஸூம், நாகிநீடுவும் விக்ரம் பிரபுவை வெறிகொண்டு விரட்டுகின்றனர். இவர்களிடம் விக்ரம் பிரபு சிக்கினாரா? இல்லையா? என்பதே ‘அசுரகுரு’ வின் ஆட்டம்!
இல்லாமைக்கு திருடுவது ஒரு வகை என்றால் மனச்சோர்வினால் ( Kleptomania ) உந்தப்பட்டு திருடுவது இன்னொரு வகை. இப்படி சந்தர்ப்பம் கிடைத்தால் திருடிவிடும் பழக்கம் உள்ளவர்கள் உலகம் முழுவதும் 3% இருப்பதாக உலக மனநல மருத்துவ சங்கம் சொல்கிறது. ரொம்ப சிம்பிளா சொல்லனும்னா… ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் வெற்றிலை பெட்டி திருடும் ஊர்வசியின் பாட்டியை ஞாபகபடுத்தி கொள்ளுங்கள். அதே மாதிரியான பழக்கம் தான் விக்ரம் பிரபுவிற்கு. திருட தோன்றினால் எந்த ரிஸ்க்கும் எடுப்பார். இப்படி திருடச்செல்லும் இடங்களில் மாட்டிகொள்ளாமல் உதவுபவர் அவருடைய நண்பர் ஜெகன். இந்த இருவரும் இயக்குனரின் விருப்பத்தின்படி நடித்துள்ளனர். விக்ரம் பிரபு ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி ஆட்டமாடுகிறார்.
விக்ரம் பிரபுவிடம் மனதை பறிகொடுக்கும் மஹிமா நம்பியார், சுண்டி இழுக்கும் அழகு. டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் ஏறக்குறைய பொருந்திவிடுகிறார். அவர் சிகரட் பிடிக்கும் ஸ்டைல்…அய்யோ! யோகி பாபு தன்னுடைய வழக்கமான சட்டையர் காமெடிகளில் சிரிக்கவைக்கிறார். அதிலும் மோடியையும், ஓபிஎஸ்-யும் வைத்து செய்திருக்கிறார்.
முதல் பாதியில் கொஞ்சம் ஸ்லோவக இருந்தாலும், இரண்டாவது பாதியில் பல ட்விஸ்ட்டுகளோட, யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ் வைத்து அசரடித்திருக்கிறார், இயக்குனர் ராஜதீப். அறிமுக இயக்குனர்கள் எடுக்கத் தயங்கும் ஒரு ஹெவியான சப்ஜெக்ட்டை முடிந்தவரை நேர்மையாக எடுத்திருக்கிறார்,
வித்தியாசமான கதைக்களம்!