தில் இருந்தா தனியா பாருங்க! ‘அஸ்வின்ஸ்’ – விமர்சனம்!

ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்தின் சார்பில், பி.வி.எஸ்.என்.பிரசாத் தயாரித்துள்ள படம், அஸ்வின்ஸ். இதில் வசந்த் ரவி, விமலா ராமன், சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயாதீப் மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை எழுதி, இயக்கியிருக்கிறார், தருண் தேஜா.

பேய்ப் படங்களிலிருந்து மாறுபட்ட படமாக, புதிய கதைக் களத்துடன், ஹாலிவுட் தரத்தில் தமிழில் வெளியாகியிருக்கும், ஒரு படமாக அஸ்வின்ஸ் இருக்கிறது. இந்தப்படம் முழுக்க முழுக்க ஹாரர் ரசிகர்களுக்கான பிரத்யேக படம்.

தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் விமலா ராமன், லண்டனில் உள்ள ஒரு பழமையான மாளிகையில் ஆரய்ச்சி செய்து வருகிறார். அப்போது தனது உதவியாளர்களை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்கிறார். விமலா ராமனின் உடல் மட்டும் மாயமான நிலையில், மற்றவர்களின் உடல் போலீஸாரால் கைப்பற்றப்படுகிறது.

இந்த மாளிகையில் நடந்த, அந்த அமானுஷ்யமான விஷயத்தை தெரிந்து கொள்ள, அமானுஷ்யமான இடங்களை தேடிப்பிடித்து வீடியோ எடுத்து வரும், வசந்த் ரவியின் தலைமையிலான குழு, இந்தியாவிலிருந்து லண்டன் வருகிறது.

அமானுஷ்ய மாளிகைக்குள் செல்வதற்கு முன்னர் வசந்த் ரவிக்கு மறைமுகமாக சில எச்சரிக்கைகள் விடுக்கப்படுகிறது. ஆனால் அதையும் மீறி தனது குழுவினருடன் இரவு நேரத்தில் உள்ளே செல்கிறார். மாளிகையின் ஒவ்வொரு பகுதியிலும் தனித்தனியாக சென்றவர்களை, சித்ரவதை செய்து கொல்லத் துடிக்கிறது, சில சக்திகள். இதிலிருந்து வசந்த் ரவியின் குழுவினர்கள் தப்பித்தார்களா, இல்லையா? விமலா ராமனின் உடன் என்ன ஆனது? என்பதே, அஸ்வின்ஸ் படத்தின் திகிலூட்டி, அலற வைக்கும் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

வசந்த் ரவி, விமலா ராமன், சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயாதீப் உள்ளிட்ட சிலரை மட்டுமே வைத்துக்கொண்டு மிரட்டி இருக்கிறார், இயக்குநர் தருண் தேஜா. வசந்த் ரவி தோன்றும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். விமலா ராமன் உள்ளிட்ட மற்றவர்களின் நடிப்பும் குறை சொல்ல முடியாதபடி இருக்கிறது. இவர்களை விட ஒரு படி மேலே சென்று மிரட்டி இருக்கிறது, பின்னணி இசையும், ஒளிப்பதிவும்.

ஒளிப்பதிவாளர் A.M எட்வின் சகாய், இசை அமைப்பாளர் விஜய் சித்தார்த், சவுண்ட் டிசைனர்ஸ் சச்சின் & ஹரி ஆகியோர்களின் பங்களிப்பு அஸ்வின்ஸ் படத்தின் மிகப்பெரிய வெற்றி.

அஸ்வின்ஸ், ஆரம்பம் முதல் இறுதி வரை ஒவ்வொரு காட்சியும் மிரட்டுகிறது. அதிலும் முதல் பாதி மிரளாதவர்களையும் மிரள வைக்கும். மாளிகைக்குள் மாட்டிக்கொண்ட வசந்த் ரவி குழுவினருடன், படம் பார்ப்பவர்களும் மாட்டிக்கொண்டதை போன்ற உணர்வு ஏற்படுகிறது. அவர்கலுடன் சேர்ந்து நாமும் வெளியே வர முயற்சி செய்கிறோம். நீண்ட நாட்களுக்கு பிறகு மிரட்டும் பேய்ப் படம்!

அதே சமயம் திரைக்கதை சற்றே தெளிவற்று இருக்கிறது. திரைக்கதையினை சற்று தெளிவாக சொல்லி இருக்கலாம். மற்றபடி ஹாரர் ரசிகர்களுக்கான விருந்தாக இருக்கிறது.

அஸ்வின்ஸ் – தில் இருந்தா தனியா பாருங்க!