படுக்கை அறை காட்சிகள் ஏராளம்! – ‘பானிபூரி’ விமர்சனம்!

லிங்கா, சாம்பிகா, இளங்கோ குமரவேல், கனிகா, வினோத் சாகர், ஶ்ரீ கிருஷ்ன தயாள், கோபால் உள்ளிட்டோர் நடித்திருக்க, ‘ஷார்ட் ஃபிலிக்ஸ்’ ஓ டி டி தளத்தில் வெளிவந்திருக்கும் வெப் சீரிஸ், பானி பூரி.

தண்டபாணியும் (லிங்கா), பூர்ணிமாவும் (சாம்பிகா) நீண்ட நாட்களாக காதலித்து வருபவர்கள். இவர்கள் ஒருவரை ஒருவர் பாணி, பூரி என செல்லமாக அழைத்து கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் பாணியும், பூரியும் பிரியும் சூழ்நிலை உருவாகிறது. பிரிவதற்கு முன்னர், சில நிபந்தனைகளுடன் ஒரு வாரம் ‘லிவிங் டுகெதர்’ ரிலேஷன்ஷிப்பில் இருக்க முடிவு செய்கின்றனர். இறுதியாக பாணியும், பூரியும் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா? என்பதே ‘பானிபூரி’ வெப் சீரிஸின் டீசன்ட்டான கதை, திரைக்கதை!

ஒடிடி தளம், ‘லிவிங் டுகெதர்’ ரிலேஷன்ஷிப் கதை. ஜி.வி.பிரகாஷ் மாதிரி ஒரு ஹீரோவை, வைத்து ‘கலீஜ்ஜா’ ஒரு வெப் சீரிஸ் பண்ணி இருக்கலாம்.  ‘பானிபூரி’ கதையில் படுக்கை அறை காட்சிகள் ஏராளம். இருந்த போதும், குடும்பத்துடன் பார்க்கக்கூடிய வெப் சீரிஸாக கொடுத்து இருக்கிறார், இயக்குநர் பாலாஜி வேணுகோபால்.

அழுத்தமான கதையில், மெல்லிய உணர்வுகளை கொண்ட திரைக்கதையில், சிறிது நகைச்சுவை கலந்து சொன்ன விதத்தில் பானிபூரி அனைவரையும் கவர்ந்து விடும்!

லிங்கா, சாம்பிகா இருவருக்கான காதல் காட்சிகள், வசனங்கள் இரண்டும் வரம்பு மீறாத வகையில் படமாக்கப்பட்டிருப்பது சிறப்பு.

கதையின் நாயகன் லிங்கா, தனக்கான கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்தவராக நடித்திருக்கிறார். காதலியை சுற்றிச் சுற்றி வரும் இவரின் அப்பாவித்தனமான காதலும் ரசிக்கும் வண்ணம் அமைந்து இருக்கிறது. தனது காதலி சாம்பிகாவின் அப்பாவான இளங்கோ குமரவேலுடன் பேசும் காட்சிகளில் பெரிதும் மனம் கவர்கிறார்.

ரோபோடிக் சையின்டிஸ்ட்டாக, கதையின் நாயகி சாம்பிகா. லிங்காவிற்கு இணையாக சிறப்பாக நடித்து இருக்கிறார். காதலனை நன்கு புரிந்து கொண்ட காதலியாக ரசிகர்களைஅ எளிதில் கவர்ந்து விடும் வசீகரம்.  இவரது அப்பாவா நடித்து இருக்கும் இளங்கோ குமரவேலுடனான உரையாடல்கள் மிகவும் வலிமையானது. ஒவ்வொரு தந்தைக்கும் மகளுக்கும் இப்படியான உரையாடல்கள் இருப்பதும், நடந்து கொள்வதும் இன்றைய டிஜிட்டல் காலக்கட்டத்தின் அவசியமான ஒன்று.

சாம்பிகாவின் தந்தையாக நடித்து, மனம் உருக வைக்கிறார், இளங்கோ குமரவேல். காதல் மனைவியை பிரிந்த தந்தை கதாபாத்திரத்தில், வாழ்க்கை முழுவதையும் மகளுக்காக அர்ப்பனிக்கும் பாசத்தால் ரசிகர்களின் மனதை எளிதில் கவர்ந்து விடுகிறார்.

வினோத் சாகர், கனிகா, அவரது கணவராக நடித்தவர், அப்பார்ட்மெண்ட் செகரட்டரியாக நடித்தவர் என, அனைவரும் தங்களது கதாபாத்திரம் அறிந்து நன்கு நடித்து இருக்கிறார்கள். சிறிது தொய்வு ஏற்படும் போது, அப்பார்ட்மெண்ட் செகரட்டரியாக நடித்தவர் வந்து அதை சரி செய்கிறார்.

நடிகர்கள் அனைவரிடமும் கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பினை கொண்டு வந்த விதத்தில் இயக்குநர் பாலாஜி வேணுகோபால், சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்.

பானி பூரி வெப் சீரிஸ்க்கு இசை அமைத்து இருக்கிறார் சுந்தர். ‘ஐ பேட்’ மூலமாக புதுமையான முறையில் இசை அமைத்து இருக்கிறார். நன்றாகவே இருக்கிறது.

‘ஷார்ட் ஃபிலிக்ஸ்’ ஓ டி டி தளத்தில் 8 பாகங்களாக வெளிவந்துள்ள, இந்த பானி பூரியை அனைவரும் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம், நெகிழலாம்.