‘அவள் பெயர் ரஜ்னி’ – விமர்சனம்!

‘நவரசா பிலிம்ஸ்’ சார்பில் ஸ்ரீஜித் கே எஸ் , ஸ்ரீஜித் பிளஸ்சி ஆகியோர் தயாரித்துள்ள படம், அவள் பெயர் ரஜ்னி. இதில் காளிதாஸ் ஜெயராம், நமீதா பிரமோத், சைஜு குருப், ரெபா மோனிகா ஜான், ப்ரியங்கா சாய் கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வினில் ஸ்காரியா வர்கீஸ் இயக்கியிருக்கிறார்.

நண்பனின் வீட்டுக்கு வந்த சைஜு குருப், தனது மனைவி  நமீதா பிரமோத்துடன் காரில் ஊரில் திரும்புகிறார். இரவு நேரத்தில் கார் நடு வழியில் பெட்ரோல் இல்லாமல் நிற்கிறது. பெட்ரோல் வாங்குவதற்காக கீழே இறங்கும் அவரை, ஒரு மர்ம உருவம் காரில் மேல் பகுதியில் வைத்து கொடுரமாக கொல்வதுடன், நமீதா பிரமோத்தையும் கொல்ல முயற்சிக்கிறது. அந்த வழியில் செல்லும் சில இளைஞர்களின் உதவியுடன் அவர் மீட்கப்படுகிறார். நமீதா பிரமோத்தின் சகோதரன் காளிதாஸ் ஜெயராம், இந்த கொலைக்கானக் காரணத்தினை கண்டு பிடிக்க முயற்சிக்கிறார். போலீஸூம் விசாரணையில் இறங்குகிறதுகிதன் பின்னர் என்ன நடந்தது என்பது தான், ‘அவள் பெயர் ரஜ்னி’ படத்தின் மர்மமான திகில் திரைக்கதை!

படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை, யூகிக்கக்கூடிய சில விஷயங்கள் இருந்தாலும், மர்மமாக செல்லும் திரைக்கதை திகிலூட்டத் தவறவில்லை! சில காட்சிகள் சொதப்பலாகவும் இருக்கிறது. திரைக்கதைக்கு மிகவும் பக்கபலமாக இருப்பது, ஒளிப்பதிவும், ‘4 மியூசிக்ஸ்’ ன் பின்னணி இசையும் தான். நேர்த்தியான ஆர்.ஆர்.விஷ்ணுவின் ஒளிப்பதிவு தனிச்சிறப்பு!

கணவன் சைஜு குருப், தன் கண் முன்னே கொல்லப்படுவதைப் பார்த்து, நமிதா பிரமோத் அதிர்ச்சியிலும், பீதியிலும் அலறும் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

நமீதா பிரமோத்தின் சகோதரனாகவும், கொலையாளியை கண்டுபிடிக்கும் கதாபாத்திரத்தில், காளிதாஸ் ஜெயராம் குறிப்பிடும் படி இயல்பாக நடித்திருக்கிறார்.

இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஸ்வின் குமாரும், சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

ஆட்டோ டிரைவராக நடித்திருக்கும் கருணாகரன், சில இடங்களில் சிரிக்க வைப்பதுடன் கவனிக்க வைக்கிறார்.

‘பூ’ ராம், திருநங்கை குறித்து பேசும் விஷயங்கள் அனைத்தும், மனதை நெருடுகின்றன.

படத்தின் முக்கியமான, திருநங்கை கதாபாத்திரத்தில் ரஜினி ரசிகராக நடித்திருக்கும் பிரியங்கா சாய் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அவள் பெயர் ரஜ்னி – க்ரைம் த்ரில்லர் பிரியர்களுக்கு ஏற்ற படம்!