‘காஞ்சுரிங் கண்ணப்பன்’ – விமர்சனம்!

‘ஏ. ஜி. எஸ். என்டர்டைன்மென்ட்’  சார்பில் கல்பாத்தி அகோரம், கணேஷ், சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ள படம், காஞ்சுரிங் கண்ணப்பன். இதில், சதீஷ், ரெஜினா கசாண்ட்ரா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ் , நாசர், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, எல்லி அவ்ரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தினை, அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியிருக்கிறார்.

விடிவி கணேஷ், சரண்யா தம்பதியினரின் மகன் சதீஷ். இவருடைய தாய் மாமன் நமோ நாராயணா. இஞ்சினியரிங் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறார், சதீஷ். ஒரு நாள் வீட்டிலுள்ள கிணற்றில் நீர் இறைக்கும் சதீஷூக்கு ஒரு வித்தியாசமான பொம்மை கட்டப்பட்டிருக்கும் ‘ட்ரீம் கேட்சர்’ கிடைக்கிறது. வித்தியாசமாக காணப்பட்ட அதிலிருக்கும் ஒரு இறக்கையை பிய்த்துவிட்டு மீண்டும் கிணற்றிலேயே போட்டு விடுகிறார். அன்று இரவு அவருக்கு ஒரு கனவு வருகிறது. அதில், அவர் ஒரு பெரிய அரண்மனைக்குள் இருக்கும் பேயிடம், சிக்கியது போல் இருக்கிறது. முதலில் அதை கனவாக சதீஷ் நினைக்க, மீண்டும் அதேபோல் கனவு வருகிறது. கனவில் நடந்தது தூங்கி எழுந்ததும் அதை நிஜத்திலும் உணரத்தொடங்குகிறார். விபரீதம் நடப்பதை தொடர்ந்து, (எக்ஸார்சிஸ்ட்) பேய் ஓட்டும் நாசரின் உதவியை நாடுகிறார். இதற்குள் சதீஷின் மொத்த குடும்பமும் அந்த பேய் அரண்மனையில் சிக்கிக் கொள்கிறது. அதிலிருந்து அவர்கள் வெளியேறினார்களா, இல்லையா? என்பதே காஞ்சுரிங் கண்ணப்பன் படத்தின் கதை.

அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியரின் வித்தியாசமான கதை, படம் பார்க்கும் ஆர்வத்தினை முதலில் தூண்டிவிடுகிறது. ஆனால், திரைக்கதையாக்கம், அந்த ஆர்வத்தினை அவ்வளவாக பூர்த்தி செய்யவில்லை!

சதீஷ், சரண்யா, ஆனந்த்ராஜ், ‘விடிவி’ கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, நமோ நாராயணன், ‘ஆதித்யா’ கதிர்  ஆகியோர் சில காட்சிகளில், சிரிக்க வைக்கிறார்கள். சில காட்சிகளில் கடித்து வைக்கிறார்கள். ஆறுதலான விஷயம் இரண்டாவது பகுதியில் திரைக்கதை சற்று வேகம் கொடுத்து ரசிக்க வைக்கிறது. ஃப்ளாஷ் பேக் காட்சிகள் சற்று போரடிக்க வைக்கின்றன.

யுவன் இசை ஓகே. ஆனால் சவுண்ட் எஃபெக்ட்ஸ் காதுகளை ரணமாக்குகிறது. மொத்ததில், காஞ்சூரிங் கண்ணப்பன், பரவாயில்லை!

காமெடி பேய் படங்களை ரசிப்பவர்களுக்கு காஞ்சுரிங் கண்ணப்பன் பிடிக்கும்!