வீரபண்ணை என்ற கிராமத்தில் உள்ள பெண்கள், அங்கிருக்கும் கோவில் கருவறைக்குள் செல்லவும், கிராமத்தை விட்டு வெளியே செல்லவும் அனுமதி கிடையாது. அதோடு பெண்கள் பருவமடைந்தவுடன் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்ற கட்டுப்பாடுகளும், பாரம்பரிய பழக்க வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த ஊரில் வசிக்கும் அபிநக்ஷத்ரா தான் பருவமடைந்ததை மறைத்து, கல்யாணத்தை தவிர்த்து 10 ஆம் வகுப்பு பொதுதேர்வில், மாவட்ட அளவில் முதலிடம் பெறுகிறாள். ஒரு இக்கட்டான சூழலில் அபிநக்ஷத்ரா பருவமடைந்தது கிராமத்தினருக்கு தெரியவருகிறது. இதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் ‘அயலி’ வெப்சீரிஸ்.
அயலி வெப்சீரிஸில் நடித்த அபிநக்ஷத்ரா, அனுமோல், ‘அருவி’ மதன், லிங்கா, சிங்கம் புலி, TSR ஶ்ரீனிவாசமூர்த்தி, லவ்லின் சந்திரசேகர், காயத்ரி உள்ளிட்ட நடிகர், நடிகைகளின் பங்களிப்பு மிகச்சிறப்பாக இருக்கிறது. இவர்களது நடிப்பினால் கதாபாத்திரங்கள் உயிர்ப்புடன் இருக்கிறது. இருப்பினும் தமிழ்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிநயஸ்ரீ, அவரின் அம்மாவாக நடித்திருக்கும் அனுமோல், அப்பாவாக நடித்திருக்கும் ‘அருவி’ மதன், மூட நம்பிக்கைகளின் உதவியோடு கிராமத்தை தன் கட்டுபாட்டுக்குள் வைத்துள்ள லிங்கா ஆகியோர் சிறப்பு கவனம் பெறுகிறார்கள்.
இன்றும் சில கிராமங்களில் பருவமடைந்தவுடன் பெண்களை பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் செயல் இருந்து வருகிறது. பெண்களின் கல்விக்கு ஆதராவாக ஓங்கி குரல் எழுப்பிருக்கிறார் இயக்குனர் முத்துக்குமார். அதை பலரும் வரவேற்பார்கள். அதே சமயத்தில் பெண்கள் மாதவிடாய் காலத்தில் கோவிலுக்குள் செல்லலாம் என்றும், பூஜை சமயங்களில் விளக்கு ஏற்றலாம் என்பதையும் சொல்லியிருக்கிறார். இது பலருக்கு வருத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தும்.
அபிநயஶ்ரீ பேசும் சில வசனங்களுக்கு கைதட்ட தோன்றுகிறது. சிங்கம்புலியும், வாத்தியாராக நடித்திருக்கும் TSR ஶ்ரீனிவாசமூர்த்தியும் சிரிக்க வைக்கிறார்கள்.
தேவையற்ற காட்சிகளால் வெப் சீரிஸின் நீளத்தை வலுக்கட்டாயமாக நீட்டியிருக்கிறார்கள். உதாரணமாக இரண்டு கிழவிகள் சக்களத்தி சண்டையிடும் காட்சிகள், லக்ஷ்மி பிரியா சந்திரமௌளி இடம் பெறும் காட்சிகள், தண்ணியடித்துக் கொண்டு சீட்டு விளையாடுவது போன்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.
கிராமத்தையும், அதன் மக்களையும் இயல்பு மாறாமல் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. பெண் இசையமைப்பாளர் ரேவாவின் இசை ஓகே!
பெண் கல்வியை மையப்படுத்தி அயலியை ரசிக்கத்தக்க வகையில் 8 எபிசோடுகளை சுவாரஷ்யமாக உருவாக்கியிருக்கிறார், கதை எழுதி இயக்கியிருக்கும் முத்துக்குமார்.
‘அயலி’ ZEE5 இல் 26 ஜனவரி 2023 இன்று முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுள்ளது