பதான் – விமர்சனம்!

யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷாருக் கான், சல்மான் கான், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் நடித்திருக்க, சித்தார்த் ஆனந்த் இயக்கி இருக்கும் படம், பதான்.

சோமாலிய கொள்ளைக் காரர்களால் கொல்லப்பட்டதாக கருதப்படும், இந்திய உளவுத் துறையின் திறமை மிகு அதிகாரி ஜான் ஆப்ரஹாம். அவர் பாகிஸ்தானின் ராணுவ அதிகாரியுடன் சேர்ந்து கொண்டு சொந்த நாட்டிற்கு எதிராக மிகப்பெரும் சதி திட்டம் தீட்டுகிறார். அந்த சதித்திட்டத்தை முறியடிக்க இன்னொரு உளவுத்துறை அதிகாரியான ஷாருக்கான் களமிறங்குகிறார். இதற்கு பிறகு நடக்கும் அட்டகாசமான, ஆக்‌ஷன் சம்பவங்கள் தான் ‘பதான்’.

லாஜிக்கை புறந்தள்ளிவிட்டு, முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது, பதான்.  முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை ஷாருக்கானின் ஆட்டம், அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைகிறது. எல்லா சண்டைக் காட்சிகளும் ஆங்கிலப்படங்களுக்கு இணையானவை. பதான் ஹாலிவுட் படங்களை பார்ப்பதை போன்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

ஷாருக்கானின் சிக்ஸ்பேக், தீபிகா படுகோனின் உச்சபட்ச கவர்ச்சி ப்ளஸ் ஆக்‌ஷன், ஜான் ஆப்ரஹாமின் வில்லத்தனம், சல்மான்கானின் ஃபைட் இவைகளுடன், இசை, ஒளிப்பதிவு ஆகியவை சேர்ந்து ஒரு விறுவிறுப்பான மாஸ் கமர்ஷியல் மசாலாவாக தெறிக்கவிடுகிறது. ஹெலிகாப்டர், பைக் ஸ்டன்ட், கார் சேஸிங் இவைகள் நம்பத்தகுந்தவையாக இல்லை, என்றாலும் ரசிக்க முடிகிறது. குறிப்பாக ஷாருக்கானும் சல்மான் கானும் ஓடும் ரயிலில் போடும் சண்டைக்காட்சியை சொல்லலாம்.

சர்ச்சையை ஏற்படுத்திய காவி நிற பிகினியில் தீபிகா படுகோன் தியேட்டரை தீப்பிடிக்க வைக்கிறார். அதீதமான கவர்ச்சி! ஆக்‌ஷனிலும் அட்டகாசமாக சுற்றி சுழலுகிறார்.

சில வருடங்களுக்கு பிறகு ஷாருக்கான் தனது இருப்பினை அழுத்தமாக பதான் படத்தின் மூலம் பதிவு செய்திருக்கிறார்.

மொத்தத்தில் பதான் ஆக்‌ஷன் பிரியர்களுக்கான பெரிய விருந்து!