அய்யோ… க்ளைமாக்ஸ், கொன்னுட்டாங்க!  ‘அழகிய கண்ணே’ – விமர்சனம்!

சேவியர் பிரிட்டோவின் ‘எஸ்தல் எண்டர்டெய்னர்’ நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் சீனு ராமசாமியிடம் துணை இயக்குநராக பணியாற்றிய ஆர். விஜயகுமார் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம், அழகிய கண்ணே.

அழகிய கண்ணே, திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் பிரபுசாலமன் இருவரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன், லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்திருக்க, அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் சிங்கம்புலி, ராஜ்கபூர், காதல் சுகுமார், ஆண்ட்ரூஸ், அமுதவானன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அழகிய கண்ணே, என்ற அழகிய தலைப்புடன் வெளியாகியிருக்கும் இந்தப்படம் ரசிகர்களை கவருமா?

நாயகன் லியோ சிவக்குமாரும், சஞ்சிதா ஷெட்டியும் எதிரெதிர் வீட்டில் வசிப்பவர்கள். இவர்களில் சஞ்சிதா ஷெட்டிக்கு, லியோ சிவக்குமாரின் மேல் காதல் உருவாகிறது. அவரிடம் தனது காதலை சொல்ல, அவரும் ஏற்றுக்கொள்கிறார். லியோ சிவக்குமார், சினிமா இயக்குநராக ஆனபின்பு கல்யாணம் செய்து கொள்வதாக முடிவெடுக்கிறார். ஆனால் சூழ்நிலை காரணமாக இவர்கள் சென்னையில் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், சினிமாவின் ‘செல்லரித்த’ காட்சிகளில் ஒன்றான பெண்ணின் முறை மாமன் இவர்களின் வாழ்க்கையில் குறுக்கிட… என்ன நடந்தது? என்ற அரதப்பழசான திரைக்கதை மூலம் சொல்வது தான், ‘அழகிய கண்ணே’.

அழகிய கண்ணே திரைப்படத்தில் பின்னணி இசை பரவாயில்லை! மற்றபடி, ஒளிப்பதிவினை தவிர எதுவும் உருப்படி இல்லை! படம் ஆரம்பித்து எதை நோக்கி போகிறது, என்பதே தெரியாத நிலையில், ஒரு வழியாக இடைவேளைக்கு பிறகு கதைக்குள் வருகிறார்கள். அதன் பிறகு சுவாரசியமற்ற திரைக்கதையில், தேவையற்ற பல காட்சிகள்.

நாயகனாக நடித்திருக்கிறார், லியோ சிவக்குமார். நாயகியாக நடித்திருக்கிறார் சஞ்சிதா ஷெட்டி. அவ்வளவு தான்.

சிங்கம் புலி, அமுதவாணன், ஆண்ட்ரூஸ் ஆகியோர் காமெடி என்ற பெயரில் கொலையாய் கொல்லுகிறார்கள்.

ஏ.ஆர்.அசோக் குமாரின் ஒளிப்பதிவு காட்சிகள் அனைத்துமே ரசிக்கும் படி இருக்கிறது. இயற்கையை அழகாய் படம் பிடித்துள்ளார்.

என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் தவிர, பின்னணி இசை நன்றாக இருக்கிறது.

உதவி இயக்குநரின் வாழ்க்கையை சொல்லலாமா, சாதிய பின்னணியில் காதலை சொல்லலாமா? என தடுமாறி, ஒன்றையும் உருப்படியாய் சொல்ல முடியாமல், அறிமுக நடிகர் லியோ சிவகுமாரையும், தயாரிப்பாளரையும் காலி செய்திருக்கிறார், இயக்குநர் ஆர். விஜயகுமார்.

அந்த க்ளைமாக்ஸ் காட்சியை எடுத்து, இந்தப்படத்தை வெளியிடுவதற்கு தனி தில்லே.. வேணும்!?