பண விரயம்! – நாயாடி – விமர்சனம்!

ஆதர்ஷ் மதிகாந்தம், என்பவர் ‘நாயாடி’ திரைப்படத்தை தயாரித்து இயக்கியதுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் காதம்பரி, பெஃபியன், சரவணன், அரவிந்த், ரவிச்சந்திரன், கீதா லக்‌ஷ்மி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

நாயாடி, என்பது பழங்குடி குறவர் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு. நாயாடி சமூகத்தினர் மாந்திரீகத்தில் வல்லவர்களாக இருந்துள்ளனர்.  இவர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளாவில் உள்ள காடுகளில் வாழ்ந்தவர்கள். இவர்களை மைய்யப்படுத்தி கதைக்களம் அமைந்திருக்கிறது.

நாயாடி, திகில் நிறைந்த த்ரில்லரா, சொதப்பலா? எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், சூனியம், மாய மந்திரங்கள் செய்யும் ஒரு ‘நாயாடி’ தம்பதியை ஊர் மக்கள் தீயிட்டு எரித்து விடுகிறார்கள். அதன் பிறகு அந்த இடத்தில் உலவுவதாகவும், அங்கே செல்பவர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

அந்த இடத்தின் சொந்தக்காரர்கள் அதை நம்பவில்லை. மேலும் அந்த இடத்தை பற்றி தெரிந்து கொள்வதற்காக, யூடியூப் குழுவினரை வைத்து வீடியோ எடுக்க திட்டமிடுகிறார்கள். யூடியூப் குழுவினர் அந்த இடத்திற்கு செல்கிறார்கள். காட்டின் உள்ளே இருக்கும், அந்த இடத்திற்கு சென்றவுடன் ஒரு அமானுஷ்யமான சக்தி அவர்களை கொடூரமாக தாக்குகிறது. அதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா, இல்லையா? என்பது தான் நாயாடி படத்தின் கதை.

வித்தியாசமான தலைப்புடனும், கதைக்களத்துடனும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய இயக்குநர், அதற்கான நடிகர்களை தேர்ந்தெடுத்ததில் தவறில்லை! ஆனால், திரைக்கதையை வடிவமைக்க முடியாமல் தவறியிருக்கிறார். போதிய அனுபவமின்மை திரையில் பளிச்சிடுகிறது.

படம் ஆரம்பித்த உடனேயே நாயாடிகள் பற்றிய குறிப்பும், 2டி அனிமேஷனும் படம் பார்ப்பவர்களை மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கியது. ஏதோ புதிதாக சொல்லப்போகிறார்கள் என நினைத்து நிமிர்ந்து உட்கார்ந்தால்… எல்லாமே சொதப்பல்.

இசையமைப்பாளர் அருணின் பின்னணி இசை, ஒளிப்பதிவாளர் மோசஸ் டேனியலின் ஒளிப்பதிவு என எதுவுமே சரியில்லை!

நாயாடி – பண விரயம்!