Azhiyatha-kolangal -2 – Review

Azhiyatha-kolangal -2 – Review

‘அழியாத கோலங்கள்’ 1979 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியாகி வெற்றி பெற்ற க்ளாஸிக் திரைப்படம்.

பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான  இத்திரைப்படத்தில் பிரதாப் போத்தன், ஷோபா நடித்திருந்தனர்.

கமல்ஹாசன்  கௌரி ஷங்கர் என்ற கதாபாத்திரத்தில் கௌரவ  தோற்றத்தில்  நடித்திருந்தார். அவருடைய அந்த கதாபத்திரத்தின் பெயரில் பிரகாஷ்ராஜ் நடித்திருக்கும் படம் தான் ‘அழியாத கோலங்கள் 2’.

மற்றபடி ‘அழியாத கோலங்கள்’ படத்திற்கும் எம்.ஆர்.பாரதி எழுதி, இயக்கி தயாரித்திருக்கும் ‘அழியாத கோலங்கள் 2’ படத்திற்கும், எந்த சம்பந்தமும் இல்லை.

எப்படி இருக்கிறது ‘அழியாத கோலங்கள் 2’. பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற எழுத்தாளர் பிரகாஷ் ராஜ், தன்னுடைய மனைவி ரேவதியுடன் வசித்து வருபவர்.

நாவல் ஒன்றிற்காக ‘சாகித்ய அகடெமி’ விருதை பெற்று திரும்பும் பிரகாஷ் ராஜ், தன்னுடன் கல்லூரியில் படித்த தோழி அர்ச்சனாவின் வீட்டில் இரவு தங்குகிறார்.

பிரகாஷ்ராஜூம், அர்ச்சனாவும் தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கும்போது  நடக்கும் விபரீதத்தால்  போலீஸ் விசாரணை உள்ளிட்ட அடுத்தடுத்த சம்பவங்களுக்கு பிறகு நிலை குழைந்து நிற்கும் அர்ச்சனா என்ன செய்கிறார்? என்பது தான் ‘அழியாத கோலங்கள் 2’ படத்தின் கதை!

Prakash Raj, Archana in Azhiyatha Kolangal 2 Movie Photos

நேசம் நிறைந்த இரு உள்ளங்களின் கள்ளமில்லா அன்பு, காதலாகும் தருவாயில் பிரிந்து பல வருடங்கள் கழித்து ஒன்று கூடும் தருனத்தை, அழகாக படம் பிடித்திருக்கிறார் இயக்குனர் எம்.ஆர்.பாஸ்கர்.

அவளின் நினைவுகளை  பல நாவல்களாக படைக்கும் எழுத்தாளனாக, பிரகாஷ்ராஜ். அவனின் நினைவுகளை சுமந்தபடியே வாழும் அர்ச்சனா இருவரும் அருமையான தேர்வு. படமாக்கப்பட்ட விதத்தில் அமைதியான ஒரு நாவலை படிப்பதை போன்ற உணர்வை தருகிறது.

நக்கல் பிடித்த சபலிஸ்ட் போலீஸாக நாசர். கணவனையும் அவன் உருவாக்கிய நாவல்களில் இருக்கும் ஜீவனையும் புரிந்து கொண்டு வாழும் ரேவதி என படத்தில் நடித்தவர்கள் அருமையாக நடித்துள்ளனர்.

ரேவதியும், அர்ச்சனாவும் சந்தித்துக் கொள்ளும் க்ளைமாக்ஸ் காட்சி, கண்களில் நீர் ததும்ப வைக்கிறது.

படம் ஆரம்பித்ததிலிருந்து முடிவு வரை தொடரும் ஒரு செயற்கை தனத்தை தவிர்த்திருக்கலாம்!

ஆழ்கடலின் அலையை ரசிக்கும் கூட்டத்தை விட, கடற்கரை ஓரத்தில் ஆர்ப்பரிக்கும் அலையை ரசிக்கும் கூட்டம் அதிகம் என்பதால், இந்தப்படம் நாவல்களை ரசித்துப் படிக்கும் ரசிகர்களுக்கு மட்டும் பிடிக்கும்!