அறிமுக நாயகன் ஜையித் கான், சோனல் மோண்டோரியோ, அச்யுத்குமார், தேவராஜ், ஸ்வப்னா ராஜ், சுஜய் சாஸ்திரி உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம், பனாரஸ்.
ஜெயதீர்த்தா இயக்கியுள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் அஜனீஷ் லோக்நாத். ஒளிப்பதிவு செய்துள்ளார் அத்வைத குருமூர்த்தி. இப்படம் கன்னடம், தமிழ் , தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கிறது.
நாயகன் ஜையித் கான் தனது நண்பர்களுடன் செய்து கொண்ட ஒரு சவாலில், அவர் வெற்றி பெறுகிறார். அதனால் நாயகி சோனல் மோண்டோரியோ அவமானமும், மன உளைச்சலும் அடைகிறார். தனது தவறினால் சோனல் மோண்டோரியோ பாதிக்கப்பட்டது தெரியவர, அவரிடம் மன்னிப்பு கோர நினைக்கிறார், ஜையித் கான். அப்படி அவர், என்ன தவறு செய்தார்? சோனல் மோண்டோரியோ ஜையித் கானை மன்னித்தாரா? என்பது தான் பனாரஸ் படத்தின் இளமை துள்ளும் கதை, திரைக்கதை..
அறிமுக நாயகன் ஜையித் கானுக்கு இது முதல் படம் போல் தெரிய வில்லை! மேலும் முதல் சில காட்சிகளிலேயே அவர் ரசிகர்களின் மனதுக்குள் நெருங்கி விடுகிறார். காதல் காட்சிகளிலும், அடிதடி காட்சிகளிலும் சிறப்பாக நடித்து படத்தின் பலமாக இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சோனல் மோண்டோரியோ, அவரது அழகினால் பலரின் தூக்கத்தினை கெடுத்துவிடுகிறார். கேமிரா படம்பிடித்திருக்கும் எல்லா கோணங்களிலும் அழகாகவே தெரிகிறார். பாடல் காட்சிகளில் கூடுதல் அழகு. சிறப்பாக நடித்தும் இருக்கிறார்.
இவர்களுக்கு அடுத்தபடியாக சுஜய் சாஸ்திரி, சற்று கவனம் பெறுகிறார். அதேபோல் அச்யுத் குமார், அவரது மனைவியாக நடித்திருக்கும் நடிகையும் தனிக்கவனம் பெறுகிறார்கள்.
கதை, திரைக்கதை, எழுதி, இயக்கியிருக்கும் ஜெயதீர்த்தா, படம் ஆரம்பம் முதல் இறுதி வரை அழகாகவும், போரடிக்காமலும் படமாக்கியிருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பான டிவிஸ்டுகளோடு படம் பார்ப்பவர்களை ஆச்சர்ய படுத்தியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் அத்வைதா குருமூர்த்தியின் ஒளிப்பதிவு, காசி நகரை அழகாக காட்டியிருக்கிறது. இதுவரை எந்தப்படத்திலும் பார்த்திராத அழகான காசி நகர்! ஒளிப்பதிவினை மேலும் மெருகூட்டியிருக்கிறது கே.எம்.பிரகாஷின் எடிட்டிங்! அதே சமயம் இடைவேளை காட்சியும், அதன் பிறகு ஆரம்பம் ஆகும் காட்சியும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது..
அஜனீஷ் லோக்நாத் இசையில் பாடல்கள் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பது சிறப்பு!
மொத்தத்தில், ‘பனாரஸ்’ போரடிக்காத காதல் கதை!