‘பீஸ்ட்’ – விமர்சனம்.

இந்தியாவின் உளவு அமைப்பான ரா (RAW) அமைப்பில் மிகவும் திறமை வாய்ந்த ஒருவர் விஜய். இவரது தலைமையில் பயங்கரவாதி உமர் ஃபாருக்கை கைது செய்து சிறையிலடைக்கிறார். அவரை மீட்க அவரது சகாக்கள் சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். அதன் மூலம் அங்கிருந்த மக்களை பணயக் கைதிகளாக சிறைபிடித்து, உமர்ஃபாருக்கை விடுவிக்க திட்டமிடுகின்றனர்.

அரசின் சார்பில் வணிக வளாகத்தை மீட்க செல்வராகவன் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். வணிக வளாகம் மீட்கப்பட்டதா? உமர்ஃபாரூக் விடுவிக்கப்பட்டாரா? விஜய் என்ன செய்தார்? என்பதுதான் ‘பீஸ்ட்’ படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

படம் ஆரம்பித்த உடனே ‘பீஸ்ட்’ ரசிகர்களுக்கு தொடர் ‘ஃபீஸ்ட்’ ஆக அமைகிறது. கலர்ஃபுல்லான சாங்க், ஸ்டைலிஷான ஃபைட் என ரசிகர்களுக்கு விருந்து தான். விஜய்யோட லுக்கும், ஃபிட்டும், எனர்ஜியான டான்ஸூம் செம்ம.. இதுவரை பார்க்காத வேறு ஒரு ஸ்டைலில் விஜய் ரசிகர்களை ஈர்க்கிறார்.

ஹலமதி ஹபீபோ… இந்த சாங்க்ல ஆடுற டான்ஸுக்காக படத்தை மறுபடியும் ஒரு தடவை பார்க்கலாம். விஜய்.. பூஜா ஹெக்டே  இரண்டு பேருக்கும் செம்ம எனர்ஜி. தியேட்டரே ஆடுது. இன்னும் கொஞ்சம் நெருக்கமான காதல் காட்சிகள் வைத்திருந்தால் ரசிகர்கள் இன்னும் குஷி ஆகியிருப்பார்கள். டான்ஸ் – மியுசிக் பெர்ஃபெக்ட் மிக்ஸிங்!!!

சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார் அபர்ணா தாஸ்.

செல்வராகவன் அசால்ட்டாக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் மிகப்பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. ஏமாற்றி விட்டார்கள்.

காமெடிக்காக விடிவி.கணேஷ், யோகி பாபு, ரெடின் கிங்க்ஸ் லீ. இவர்களில் விடிவி.கணேஷ் சிரிக்க வைக்கிறார். அவர்  வரும் எல்லா காட்சிகளிலுமே சிரிப்பு தான்.

தன்னுடைய வழக்கமான தனித்துவ பாணியில் திரைக்கதை அமைத்திருக்கிறார், நெல்சன் திலீப்குமார். முதல் பாதியில் காதல், கலாட்டா, டான்ஸ், ஃபைட்டுன்னு சலிப்பில்லாமல் செல்கிறது. இரண்டாம் பாதியில் சற்றே தடுமாறி இருக்கிறார்.

சில காட்சிகள் நம்பகத்தனமையை இழந்திருப்பதை தவிர்த்து இருக்கலாம். அதாவது மத்திய உள்துறை அமைச்சர் கதாபாத்திரத்தை உள்ளூர் கவுன்சிலர் அளவுக்கு உருவகப்படுத்தி இருப்பது, துப்பாக்கியையே பார்த்திராத சுனில் ரெட்டியும் அவரது கூட்டாளியும் துப்பாக்கியை எடுத்து சுடுவது.. போன்ற.

மொத்தத்தில்.. விஜய்யின் கிளாஸ் அன்ட் மாஸ் லுக், நெல்சன் திலீப்குமாரின் டார்க் காமெடி,, மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, அனிருத்தின் இசை  ஆகியவை கலந்த ஸ்டைலிஷ், கமர்ஷியல் மசாலா!