ப்ரோகன் மூவிஸ் சார்பில் பீட்டர் ராஜ் தயாரித்துள்ள படம், பெல். இதில் குரு சோம சுந்தரம், டான்ஸ் மாஸ்டர் ஶ்ரீதர், நிதீஷ் வீரா, பீட்டர் ராஜ், துர்கா, ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பழந்தமிழர்களின் இயற்கை மருத்துவத்தின் மகத்துவத்தை முன்னிறுத்தி கதை, திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார், இயக்குநர் வெங்கட் புவன்.
பரணி கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராபர்ட் இசை அமைத்திருக்கிறார்.
சிங்கவனம் காட்டில் இருக்கும் ஒரு அபூர்வமான மூலிகை நிசும்பசூதனி. இந்த மூலிகையை கொண்டு தயாரிக்கப்படும் மருந்தால், மரணமடைவதை தள்ளிபோடலாம். இறப்பவரை அதிலிருந்து காப்பாற்றவும் செய்யலாம். அந்த மூலிகையை டான்ஸ் மாஸ்டர் ஶ்ரீதர், குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள். இதைத்தேடி குரு சோம சுந்தரம், தனது சகாக்களுடன் சிங்கவனம் காட்டிற்கு வருகிறார். அவர் நிசும்பசூதனியை கைபற்றினாரா, இல்லையா? என்பதே பெல் படத்தின் கதை.
பெல் படத்தில் சொல்லப்பட்ட நிசும்பசூதனி என்ற மூலிகை, உண்மையில் இல்லை. அது வெறும் கப்சா! நிசும்பசூதனி என்பது தஞ்சாவூரில் உள்ள ஒரு அம்மன் கோயில். இந்த கோயிலில் உள்ள பெண் தெய்வத்தின் பெயரே நிசும்பசூதனி.
இயக்குநர் வெங்கட் புவன், மூலிகைகளின் சிறப்புகளை எடுத்து சொல்ல முயற்சித்திருப்பது பாராட்டுக்குரியது. கதையை நன்கு யோசித்தவர், திரைக்கதையில் தடுமாறியிருக்கிறார். இன்னும் சிறப்பாக வடிவமைத்திருக்கலாம். மறைந்த நடிகர் நிதிஷ் வீரா, டான்ஸ் மாஸ்டர் ஶ்ரீதர் இருவரையும் ஒரே கதாபாத்திரமாக சித்தரித்துள்ளது, புதுமை. இயக்குநரை பாராட்டியே ஆகவேண்டும்.
நடிகர்களை பொறுத்தவரை மறைந்த நடிகர் நிதிஷ் வீரா, குறிப்பிடும்படி நடித்திருக்கிறார். டான்ஸ் மாஸ்டர் ஶ்ரீதர் ஓவர் ஆக்டிங் நடிப்பினில், ரசிகர்களை கொல்லுகிறார். குரு சோமசுந்தரம் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. ரசிகர்களை பெரிதாக கவரவில்லை! இவரைப்போலவே பீட்டர் ராஜ். துர்கா, ஸ்வேதா இருவரும் பரவாயில்லை.
பரணி கண்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கான பலமாக இருக்கிறது.
பெல், பெயர்க் காரணம் நன்றாக இருக்கிறது. மற்றபடி…!?