போர்(த்)தொழில் – விமர்சனம்! 

APPLAUSE ENTERTAINMENT மற்றும் E4 EXPERIMENTS & EPRIUS STUDIOS சார்பில், தயாரிப்பாளர்கள் சமீர் நாயர், தீபக் சே கல், முகே ஷ் R மே த்தா, C.V. சாரதி, பூனம் மெஹ்ரா, சந்தீப் மெஹ்ரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம், போர் தொழில். இதில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல், P L தேனப்பன், நிழல்கள் ரவி, O.A.K சுந்தர், சரத் பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர், விக்னேஷ் ராஜா இயக்கியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பல சீரியல் கில்லர் திரைப்படங்கள் வந்திருந்தாலும், போர் தொழில் திரைப்படம் தனித்து இருக்கிறது.

மலைக்கோட்ட மாநகரம் திருச்சியை சுற்றியுள்ள காட்டுப்பகுதிகளில், இளம்பெண்கள் தொடர்ச்சியாக கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்திய இந்தக் கொளையாளியை கண்டுபிடிக்க, சிபிசிஐடி அதிகாரி லோகநாதன் (சரத்குமார்) நியமிக்கப்படுகிறார். அவருக்கு உதவியாக பிரகாஷ் (அசோக் செல்வன்), வீணா (நிகிலா) ஆகியோரை கொண்ட டீம், களத்தில் இறங்குகிறது. கொலையாளியை கண்டுபிடித்தார்களா, இல்லையா? என்பதே மர்மங்கள் நிறைந்த, திக்.. திக்.. திரைக்கதை, மற்றும் க்ளைமாக்ஸ்!

அறிமுக இயக்குநர், விக்னேஷ் ராஜாவின் முதல் வெற்றியே கதாபாத்திரத்திற்கேற்ற கச்சிதமான நடிப்பினை, நடிகர்களிடமிருந்து வெளிக்கொண்டு வந்தது தான். சரத்குமாரின் நடிப்பினை ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட பல படங்களில் நாம் பார்த்திருந்தாலும், இந்தப்படத்தில் வித்தியாசமான ஒரு நடிகராக, இதுவரை நடிக்காத புதிய பாவனையில் நடித்திருக்கிறார். அதை ரசிக்கவும் முடிகிறது.

அவரைப் போலவே அசோக் செல்வன், நிகிலா விமல் உள்ளிட்ட நடிகர்களின் பங்களிப்பும் சிறப்பாக இருக்கிறது.

மூத்த போலீஸ் அதிகாரியிடம் பயிற்சி பெறும், இளநிலை போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் அசோக் செல்வன் நடிப்பு, கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்க்கிறது. போலீஸ் வேலையில் புதிதாக சேர்ந்தவர்களை, அப்படியே கண்முன் நிறுத்துகிறார். இணத்தை பார்த்து அதிர்வதும் அதன் பின்னர் பழகி கொள்வதும், சீனியர் போலீஸ் அதிகாரிகளிடம் நடந்து கொள்ளும் விதமும் சிறப்பு!

நிகிலா விமல், ஆர்ப்பாட்டம் இல்லாத அழகான நடிப்பு!

ஆரம்பம் முதல் இறுதி வரை, ஒரு திகிலுடன் பயனிக்கும் திரைக்கதைக்கு, ஒளிப்பதிவு கூடுதலாக திகிலூட்டுகிறது. அசோக் செல்வன் கொலையாளியை நெருங்கிய பின் உச்சக்கட்ட திகில். இந்தக்காட்சி சீட்டின் நுனிக்கு வரச்செய்யும். படத்தில் இடம் பெறும் சில வசனங்கள், கை தட்டல் பெறுகின்றன.

இரண்டு கொலையாளில், ஒருவர் சொல்லும் கொலைகளுக்கான காரணம் ஏற்று கொள்ளும்படி இல்லை. மற்றபடி பெரிய குறைகள் எதுவும் இல்லை.

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா, காட்சிகளை தொய்வில்லாமல் இயக்கியிருக்கிறார். அதோடு நடிகர்களிடமிருந்தும், சிறப்பான நடிப்பினை வெளிக்கொணர்ந்திருக்கிறார். ஒரு சிறப்பான மர்ம நாவலை படிப்பதை போன்ற உணர்வும், தெளிவான திரைக்கதையும் படத்தின் பெரும் வெற்றி.

போர்(த்) தொழில் மர்ம படங்களை, விரும்பி பார்ப்பவர்களுக்கு பிடிக்கும்!