சந்தானம், தாரா அலிஷா, ஸ்வாதி முப்பலா, சௌகார் ஜானகி ஆகியோர் நடித்திருக்க, ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘பிஸ்கோத்’ எப்படியிருக்கிறது?
சிறிய அளவில் பேக்கரி நடத்திவரும் சந்தானத்தின் அப்பா ‘ஆடுகளம்’ நரேன். ஆனந்த்ராஜ் இருவரும் நண்பர்கள். சந்தானத்தின் சிறு வயதினிலேயே அவரது அப்பா ‘ஆடுகளம்’ நரேன் இறந்து விடுகிறார். அதன் பிறகு பேக்கரியை நடத்தி வரும் ஆனந்த்ராஜ் அதை மிகப்பெரிய அளவில் விரிவு படுத்துகிறார். சந்தானமோ அந்த பேக்கரியின் சாதரன தொழிலாளியாக இருந்து வருகிறார்.
பேக்கரியின் ஜெனரல் மேனேஜர் பதவியை பிடிக்க சந்தானத்திற்கும் இன்னொருவருக்கும் போட்டி நடக்கிறது. இதனிடையே சில காதல் காட்சிகள் நடந்தேற, அதன்பிறகு நடக்கும் சம்பவங்களே படத்தின் சுவாரஷ்யமில்லாத திரைக்கதை, மற்றும் க்ளைமாக்ஸ்!!
சந்தானம் என்றாலே ஒன்லைன் கவுன்டர் காமெடிகள் தான் என நம்பி படம் பார்க்க வந்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தினை கொடுத்துள்ளார்கள். எத்தனையோ ஹீரோக்களின் உயர்விற்கு காமெடி தர்பார் நடத்திய சந்தானம், இந்தப்படத்தின் நமத்துப்போன ‘லொள்ளு சபா’ மனோகரையும், ‘மொட்டை’ ராஜேந்திரனையும் சேர்த்துகொண்டு படாத பாடுபட்டு ஒரு சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார்.
காமெடி சரியில்லை ஓகே! கதை, திரைக்கதை அதுவாவது நல்லாயிருக்கான்னு கேட்டா அதுவும் சரியில்லை. இயக்குனர் ஆர்.கண்ணன் சீரியஸ்ஸா கதை சொல்வதா, காமெடியா கதை சொல்வதா, ஸ்பூஃப் ஆக கதை சொல்வதா… என, குழம்பி, ஏனோ, தானோவென கதை சொல்லி முடித்திருக்கிறார்.
இன்னொரு படத்திலிருந்து இன்ஸ்பையர் ஆகி படத்தின் கதையை ‘சுட்ட’ மாதிரி திரைக்கதையையும் சுட்டிருக்கலாம்!!!
தாரா அலிஷா, ஸ்வாதி முப்பலா என இரு கதாநாயகிகளை வைத்துக்கொண்டு ஒரு பாட்டினை கொடுத்திருக்கிறார். இரண்டு பேருமே வந்து போகிறார்கள். எதற்காக இரண்டு கதாநாயகிகள்?
படம் முழுவதும் சந்தானம் முகத்தில் சோகம் பரவிக்கிடக்கிறது. நடிகருக்கு புத்துணர்ச்சியான முகம் அவசியம் என்பதை மறந்து விட்டாரோ?
சாதனைகள் பல புரிந்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு இது 400 வது படம் என்கிறார்கள். எண்ணிக்கைக்கு மட்டுமே சிறப்பு!
இதுக்கு மேலேயும் படம் எப்படின்னு கேட்டிங்கன்னா…. பிம்பிளிக்கி பிளாப்பி மாமா பிஸ்கோத்து