மரிஜூவானா – விமர்சனம்!

‘அட்டு’ படத்தின் நாயகன் ரிஷி ரித்விக், ஆஷா பார்த்தலோம் இணைந்து நடித்துள்ள ‘மரிஜூவானா’ படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குனர் எம்.டி.ஆனந்த், Third Eye Creatio ன் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார்.

பிரபலமான திரையரங்கம் ஒன்றில் அமைச்சரின் மகனுடன் இன்னொருவரும் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களை தொடர்ந்து மேலும் சில கொடூரமான தொடர் கொலைகள் நடக்கிறது.

அதை தொடர்ந்து அந்த கொலையை கண்டுபிடிக்கும் பொறுப்பு போலீஸ் அதிகாரி ரிஷி ரித்விக்கிடம் ஒப்படைக்கப்படுகிறது. ரிஷி ரித்விக், கொலையாளியை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

‘கஞ்சா’ ன்னு பெயர் வைக்க முடியாதுன்றதுனால ‘மரிஜுவானா’ன்னு பெயர் வைத்துள்ளனர். அறிமுக இயக்குனர் எம்.டி.ஆனந்த், மிக தைரியமாக அரசையும், சமூகத்தையும் மிக கடுமையாக சாடியுள்ளது நியாயமாகவே தெரிகிறது. சென்னையில் கஞ்சா கிடைக்கும் இடங்களை படத்தில் கோடிட்டு காட்டியிருப்பது உண்மை தான் என்கின்றனர், சிலர்.

இந்த போதையால் ஏற்படும் தீமைகளை சொல்லியிருக்கும் இயக்குநர் அந்த போதைக்கு அடிமையாகும் இளைஞர்களை விட அவர்களை சுற்றியிருப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். பாராட்டப்பட வேண்டியவர்.

போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ரிஷி ரித்விக் தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். 

அறிமுக நாயகி ஆஷா பார்த்தலோம் காதல் காட்சியிலும், பாடல் காட்சியிலும் தாராள கவர்ச்சி காட்டி ரசிகர்களை குஷி படுத்துகிறார்.

வில்லனாக நடித்திருப்பவர் சரியான தேர்வு. காமெடின்னு சொல்லி பவர் ஸ்டார் சீனிவாசனை வைத்து ரசிகர்களை கொலையாய் கொல்லுகிறார்கள்.

முதல் படத்திலேயே சமூகத்தில் உள்ள ஒரு பிரச்சனையை கதையாக தேர்வு செய்து படமாக்கியிருக்கும் இயக்குநர் எம்.டி.ஆனந்தை பாராட்ட வேண்டும்.

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பைக் கூட்டியிருந்தால் மரிஜுவானா எல்லோராலும் பாராட்டும் படியிருந்திருக்கும்.