‘எம்பரர் என்டெர்டெயின்மென்ட்’ சார்பில் இர்ஃபான் மாலிக் தயாரித்து, சர்ஜுன்.கே.எம் இயக்கியுள்ள படம், ‘பிளட் மணி’. ஷிரிஷ், ப்ரியா பவானி ஷங்கர், கிஷோர், பஞ்சு சுப்பு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
இந்த வாரம்’ ஜீ5 ஒடிடி’ தளத்தில் நேரடியாக வெளியாகியிருக்கும் இந்தப்படம் எப்படியிருக்கிறது? பார்ப்போம்.
‘பிளட் மணி’ என்பது வளைகுடா நாடுகளில் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு ஈடு செய்யும் விதத்தில் கொலையாளி கொடுக்கும் பணம் ஆகும். இதில் தொகை என்பது கொடுப்பவரையும் வாங்குபவரையும் பொறுத்து வேறுபடும்.
வளைகுடா நாட்டின் ஒன்றில் கிஷோரும் அவரது தம்பியும் ஒரு அரபி வீட்டில் வேலை செய்து வருகின்றனர். அவர்களுடன் ஓரு இலங்கை பெண்ணும் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கிஷோர் மீதும் அவரது தம்பி மீதும் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு அவர்களுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்படுகிறது. இந்த செய்தி பத்திரிக்கையாளரான ப்ரியா பவானிஷங்கருக்கு தெரிய வருகிறது. தனது சக பத்திரிக்கையாளர் ஷ்ரிஷ் உடன் இதன் பின்னணியை ஆரய்ந்து செய்தி வெளியிட முயலும் போது பல திடுக்கிடும் செய்திகள் வெளிவருகிறது. அது என்ன என்பது தான் படத்தின் கதை.
வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் இது போல் பல பிரச்சனைகளை எதிர்கொள்வது என்பது அவ்வப்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது. போதிய விழிப்புணர்வின்றியும் சூழ்நிலை காரணமாகவும் இவர்களை போல் பலர் இன்னும் சிறையில் இருக்கிறார்கள் என்பதே உண்மை.
பத்திரிக்கையாளர்களாக ஷ்ரிஷ், ப்ரியா பவானிஷங்கர் இருவரும் தூக்கு தண்டனையிலிருந்து கிஷோரையும் அவரது தம்பியையும் எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என்று நினைத்து அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பாராட்டும் படி இருக்கிறது. தங்களது கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளனர். ஆனால் அதற்கான காட்சி அமைப்புக்கள் கேலிக்கூத்தாக இருக்கிறது அதிலும் கள்ளத்தோணியில் இலங்கை செல்லும் காட்சி அபத்தத்தின் உச்சம்.
குறிப்பாக தொலைக்காட்சி நிறுவனத்தில் நடக்கும் காட்சிகள் அனைத்துமே கேலிக்குரியவை.
கிஷோர் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் மனதில் நிறைகிறார். மொழி தெரியாத நிலையில் தனக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தம்பியுடன் தவிக்கும் போது கண்களில் நீர் வரவழைக்கிறார்.
வித்தியாசமான ஒரு கதைக்களத்தை எடுத்தவர்கள் அதற்கான திரைக்கதை ஆக்கத்தில் தடுமறியிருக்கிறார்கள்.