‘லெமன் லீஃப் கிரியேஷன்ஸ்’ சார்பில் ஆர் .கணேஷ் மூர்த்தி, ஜி.சவுந்தர்யா ஆகியோர் தயாரித்து, ‘நீலம் புரடக்ஷன்ஸ்’ சார்பில் இயக்குனர் பா. ரஞ்சித் வழங்கியிருக்கும் படம், ப்ளூ ஸ்டார். இதில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, பிரித்வி, திவ்யா துரைசாமி, பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ்பிரபா, திரைக்கதை, வசனம் எழுதியிருக்க, எஸ். ஜெயக்குமார் கதை எழுதி, இயக்கியிருக்கிறார்.
1990 களில் நடக்கும் கதை. அரக்கோணம் அருகில் உள்ள ஒரு கிராமம், பெரும்பச்சை. இங்கே, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையே சாதிப் பகை. அதில், ஊர்ப்பகுதியில் வசிக்கும் இளைஞர்களில், சாந்தனு தலைமையில் ஒரு தரப்பினர். காலனிப் பகுதியில் வசிக்கும் இளைஞர்களில், அசோக் செல்வன் தலைமையில் ஒரு தரப்பினரும், அந்த ஊரில் உள்ள ஒரு மைதானத்தில் தனித்தனியாக, கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். அந்த மைதானத்தில் யாருக்கு முன் உரிமை என்பதில் பிரச்சனை உருவாகிறது. இந்தப்பிரச்சனையின் வாயிலாக தொழில்முறை கிரிக்கெட் பயிற்சி பெற்ற உயர்சாதி குழுவினர், சாந்தனு மற்றும் அசோக் செல்வன் இருவரையுமே அவமானப்படுத்துகின்றனர். இதன் பிறகு என்ன நடந்தது, என்பது தான், ப்ளூ ஸ்டார் படத்தின் கதை.
படத்தின் நாயகர்களாக நடித்திருக்கும் சாந்தனு, அசோக் செல்வன் இருவரும் கதாபாத்திரத்தினை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
அசோக் செல்வன், காதலி கீர்த்தி பாண்டியனின் தோளில் சாய்ந்தபடி, காதலில் உருகுவதும், சாந்தனுவிடம் ஆக்ரோஷமாக மோதும் காட்சிகளிலும், சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்.
சாந்தனு, அசோக் செல்வனின் அம்மா லிசி ஆண்டனியிடம், அவரது பெயரைச்சொல்லி, திமிராக வட்டி வசூல் செய்யும் போதும், உயர் சாதியினர் ‘எம் சி எஃப்’ கிரிக்கெட் கிளப்பில், அவரை அவமானபடுத்தும் காட்சியிலும், சிறப்பான உணர்வின் மூலமாக, சாந்தனு தன் கதாபாத்திரத்தினை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அனைத்து காட்சிகளிலும் இயக்குனரின் நடிகராக மிளிர்கிறார்.
அசோக் செல்வனின் காதலியாக நடித்திருக்கும் கீர்த்தி பாண்டியன், துள்ளித்திரிந்தபடி தனது காதலினை, அசோக் செல்வனிடம் உறுதி படுத்தும் காட்சிகளிலும், கட்டாயமாக திருமணம் நிச்சயித்த பின்னர், செய்வதறியாது அசோக் செல்வனை வெறித்தபடி நிற்கும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அசோக் செல்வனின் தம்பியாக நடித்திருக்கும் பிருத்விராஜ், தனது நடிப்பில் இவர்களை, அசால்ட்டாக ஓவர்டேக் செய்கிறார், பிரித்வி. வயதுக்கே உரிய துடுக்கான இளைஞராகவும், கவிதை பாடியபடியே தனது காதலி திவ்யா துரைசாமியை சுற்றி வரும் இடங்களிலும், ரசிகர்களிடம் எளிதாக கை தட்டல்களை பெற்றுவிடுகிறார்.
மற்றபடி, ‘பக்ஸ்’ பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி ஆண்டனி, குமரவேல் உள்ளிட்டோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர், தமிழ் ஏ.அழகனின் ஒளிப்பதிவும், கோவிந்த் வசந்தாவின் இசையும் படத்தின் பலமாக இருக்கிறது.
கிரிக்கெட் தான் படத்தின் மையக்கரு என்றாலும், நீளமான அடிக்கடி வரும் கிரிக்கெட் காட்சிகள் சோர்வைத் தருகிறது. அதுவே படத்தின் பெரும் பலவீனமாவும் இருக்கிறது! அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் இவர்களின் காட்சிகளையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். மற்றபடி ‘ப்ளூ ஸ்டார்’ ஓகே தான்!