‘சிங்கப்பூர் சலூன்’ – விமர்சனம்!

ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், மீனாக்‌ஷி சௌத்ரி, கிஷன் தாஸ், ஆன் ஷீத்தல், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ ஷங்கர், ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம், சிங்கப்பூர் சலூன். எழுதி இயக்கியிருக்கிறார், கோகுல். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில், ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

சிங்கப்பூர் சலூன் என்ற பெயரில், சவரத் தொழில் செய்து வருபவர், லால்.  இவரது சலூன் மட்டுமே, ஊரில் உள்ள ஒரே சலூன். ஆர்ஜே பாலாஜி, சிறுவயது முதலே லால் முடி வெட்டும் ஸ்டைலினால் ஈர்க்கப்படுவதுடன், அவரது எதிர்கால லட்சியமே, சொந்தமாக ஒரு சலூன் நடத்துவது தான், என்ற அளவினில் சதாகாலமும், முடிவெட்டுவதை மட்டுமே லட்சியக் கனவாகக் கொண்டிருக்கிறார். தூங்கும் போது கூட கையில் கத்திரியுடன் தூங்குகிறார். இதற்கு ஆர்ஜே பாலாஜியின் அப்பா தலைவாசல் விஜய் மறுப்பு தெரிவிக்கிறார்.

ஆர்ஜே பாலாஜியின் பிடிவாதத்தால், அவரது அப்பா தலைவாசல் விஜய் சம்மதம் தெரிவிக்கிறார். தனது மாமனார் சத்யராஜ் தயவினால் பல கோடிகள் செலவு செய்து, பிரம்மான்டமான  முறையில் சிங்கப்பூர் சலூன் என்ற பெயரில் சலூன் ஒன்றினை துவங்குகிறார். அரசு இதற்கு தடை விதித்து, சிங்கப்பூர் சலூனை இடிக்க முயற்சிக்கிறது. இதன் பிறகு என்ன நடந்தது? என்பதே சிங்கப்பூர் சலூன் படத்தின் கதை.

உயிர்ப்பில்லாத திரைக்கதை படத்தின் பெரும் பலவீனம். படம் ஆரம்பித்த 15 நிமிடங்கள், செம்ம போர்! அதன் பிறகு இடைவேளை வரை, ஜாலியாக செல்கிறது. இடைவேளைக்குப் பிறகு, திரைக்கதை எதை நோக்கிச் செல்வது, எனத் தெரியாமல், ஒரு வழியாக அய்யோடா!  க்ளைமாக்ஸூடன் முடிகிறது.

ஒருவர், ஒரு கலையால் ஈர்க்கப்படும் போது, அதற்கான அழுத்தமான காரணம் சொல்லப்படவேண்டும். அப்படி, இதில் சொல்லப்படவில்லை! என்பதால், படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய ஈர்ப்பு ஏற்படவில்லை. சத்யராஜ் குடித்துவிட்டு கும்மாளம் போடும் காட்சியை, ரசித்து ரசித்து எடுத்த இயக்குனர் கோகுல், எமோஷனல் காட்சிகளை வடிவமைக்க முடியாமல் திணறியிருக்கிறார்.

சிங்கப்பூர் சலூன் படத்தின் கதையும், திரைக்கதையும் ஆர்ஜே பாலஜிக்கு எந்த விதத்திலும் பயன்படவில்லை!  அவரது நடிப்பு, இயல்பு நிலையிலிருந்து விலகி இருக்கிறது. எளிதில் ரசிகர்களை கவர்ந்து விடும் அவரது நடிப்பு, இதில் மிஸ்ஸிங். அவருக்கான எமோஷனல் காட்சிகள் மோசமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அலுத்தமாக சொல்லப்படவேண்டிய காட்சிகள், ஏனோ.. தானோ… என்று இருக்கிறது.

நாயகி மீனாக்‌ஷி சௌத்ரியின் தந்தையாக நடித்திருக்கும் சத்யராஜ், இடைவேளைக்கு முன்னர், ஒட்டு மொத்த தியேட்டரையும் கலகலப்பாக்கியிருக்கிறார். மற்றபடி, குறிப்பிட்டு சொல்ல எதுவும் இல்லை.

நாயகியாக நடித்திருக்கும் மீனாக்‌ஷி சௌத்ரி, ஆர்ஜே பாலாஜியின் நண்பராக நடித்திருக்கும் கிஷன் தாஸ், லால், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ சங்கர், ஒய்.ஜி.மகேந்திரன், சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் அரவிந்த்சாமி, ஜீவா உள்ளிட்டோர் பெரிதளவில் மனம் கவரவில்லை!

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு, விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள்,ஜாவேத் ரியாஸின் பின்னணி இசை உள்ளிட்டவைகள் பரவாயில்லை!

மொத்தத்தில்,  ‘சிங்கப்பூர் சலூன்’ ஆர்ஜே பாலாஜிக்கு, சறுக்கல்!