‘பூமர் அங்கிள்’ – விமர்சனம்!

ரஷ்ய நாட்டுப் பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்ட யோகிபாபு, அவரிடமிருந்து விவாகரத்து கேட்கிறார். சுமூகமான விவகாரத்துக்கு மறுக்கும் ரஷ்ய நாட்டுப் பெண் சில நிபந்தனைகள விதிக்கிறார். அதாவது, யோகிபாபுவுக்கு சொந்தமான பூர்வீக அரண்மனைக்குச் சென்று, அங்கே சில நாட்கள் தங்கி வாழவேண்டும் என யோகிபாபுவை நிர்பந்திக்கிறார். அதற்கு சம்மதிக்கும் யோகிபாபுவும் சில நிபந்தனைகளை விதிக்கிறார். இதைப் பொருட்படுத்தாத அந்தப்பெண் அதை மீறுகிறார்.

இதற்கிடையே,  அரண்மனைக்கு வரும் யோகி பாபுவை பழிவாங்க, அவரது பால்ய காலத்து நண்பர்களான சேசு, தங்கதுரை, பாலா ஆகியோர் முயற்சிக்கிறார்கள். இவர்களை பின் தொடர்ந்து, ஊர் தலைவர், ரோபோ சங்கரும் அந்த அரண்மனைக்குள் நுழைகிறார். இதன் பிறகு நடக்கும் கலாட்டா களேபரங்கள் தான், ‘பூமர் அங்கிள்’.

கோலிவுட்டில், காமெடி நடிகர்கள் பற்றாக்குறையினால், ஏகபோக ராஜ்யம் நடத்தி வரும் யோகிபாபு, வழக்கமான கேலி பேசி, சிரிக்கவைக்க முயற்சிக்கிறார். சில இடங்களில் மட்டுமே சிரிப்பு வருகிறது. பல இடங்களில் அய்யோ ஆளைவிட்டால் போதுமென்ற அளவிற்கு இருக்கிறது.

யோகிபாபு தான் சிரிக்க வைக்கவில்லை! சேசு, தங்கதுரை, பாலா, ரோபோ சங்கர் ஆகியோராவது சிரிக்க வைப்பார்களா? என எதிர்பார்த்தால் அவர்களும் ஏமாற்றி விட்டார்கள்.

ஓவியா, ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டுவிட்டு போகிறார்!

மர்ம அரண்மனைக்குள், உலகப்புகழ் பெற்ற சூப்பர் ஹீரோக்களுடன், இந்தியாவின் சூப்பர் ஹீரோ ஷக்தி மானும் இணைந்து, திரைக்கதையை நகைச்சுவையாக சொல்ல முயற்சித்த இயக்குநர் ஸ்வாதேஷ்.எம்.எஸ், இன்னும் கவனத்துடன் திரைக்கதை அமைத்திருக்கலாம்.

ஒளிப்பதிவாளர் சுபாஷ் தண்டபானி காட்சிகளை சிறப்பாக படமாக்கியிருக்கிறார். கிராபிக்ஸ் டீமின் பணி சிறப்பானது!

இசையமைப்பாளர்கள் சாந்தன் – தர்ம பிரகாஷ் இசை ஓகே!

‘பூமர் அங்கிள்’ – சிறுவர்களுக்கான படம்.