இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 1 விழுக்காடு மக்கள், அதாவது 1.2 முதல் 1.5 கோடி மக்கள் பொதுவழக்கில் ‘காக்கை வலிப்பு’ என்று அழைக்கப்படும் வலிப்பு நோயுடன் (Epilepsy) வாழ்ந்து வருகின்றனர். தற்போதைய நவீன மருத்துவ உலகில் அசாத்திய முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், சுமார் 20% முதல் 30% வரையிலான நோயாளிகளுக்குப் பொதுவான மாத்திரைகள் மூலமும் வலிப்புத்தாக்கங்கள் கட்டுக்குள் வராமல் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
இந்த கடுமையான சூழலை மாற்றி, முறையான மருத்துவ நெறிமுறைகளுடன் உலகத்தரம் வாய்ந்த ஒரே சீரான சிகிச்சைகளை வழங்கும் நோக்கில், சென்னையின் மூன்று கிளைகளையும் உள்ளடக்கிய ‘ஒருங்கிணைந்த மண்டல வலிப்பு நோய் மையத்தை’ (K-REC) காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
காவேரி மருத்துவமனையின் நரம்பியல் குழு வழிகாட்டியும், மூளை மற்றும் தண்டுவட நிறுவனத்தின் இயக்குநருமான டாக்டர் கிரிஷ் ஸ்ரீதர் தனது பிரத்யேகக் கருத்துக்களில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“வலிப்பு நோய் என்பது ஒரு சிக்கலான நரம்பியல் பாதிப்பாகும், மேலும் சிகிச்சையின் வெற்றியானது துல்லியமான நோயறிதல் வகைப்பாட்டைச் சார்ந்துள்ளது. முறையான மருந்துகளை உட்கொண்ட பிறகும் வலிப்புகள் கட்டுப்படுத்தப்படாமல் இருக்கும்போது, அதன் பின்னணியில் உள்ள கட்டமைப்பு சார்ந்த குறைபாடு உள்ளதா அல்லது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தக்கூடிய வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பதைக் கண்டறிவது அவசியமாகும்.
K-REC மூலம், நரம்பியல் நிபுணர்கள், நரம்பியல் கதிரியக்க நிபுணர்கள், மின் உடலியல் நிபுணர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், உளவியலாளர்கள் மற்றும் மறுவாழ்வு நிபுணர்களை ஒன்றிணைத்து, அத்தகைய நோயாளிகளை கூட்டாக மதிப்பீடு செய்கிறோம். இந்த பல்துறை அணுகுமுறையானது, வலிப்பு நோய்க்கான அறுவை சிகிச்சைக்குப் பொருத்தமானவர்களை சரியான கட்டத்தில் கண்டறியவும், அவர்களுக்கு சிறந்த வலிப்புக் கட்டுப்பாடு மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத்தரத்திற்கான வாய்ப்பை வழங்கவும் எங்களுக்கு உதவும்” என்று விளக்கமளித்தார்.
காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறும்போது,
“இந்தியாவில் மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியாத சுமார் 13 முதல் 15 லட்சம் நோயாளிகள் வலிப்பு நோய் அறுவை சிகிச்சைக்கு முற்றிலும் தகுதியானவர்களாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஆண்டுதோறும் 1,500-க்கும் குறைவான அறுவை சிகிச்சைகளே இங்குச் செய்யப்படுகின்றன. இந்த மிகப்பெரிய இடைவெளியைக் குறைப்பதே ‘K-REC’ மையங்களின் முக்கிய நோக்கமாகும்.
நோய் கண்டறிதல் மற்றும் மருத்துவ மேலாண்மையிலிருந்து மேம்பட்ட மதிப்பீடு, அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு வரை ஒரு தடையற்ற பாதையை உருவாக்குவதன் மூலம், சிறப்பு வலிப்பு நோய் சிகிச்சையை மேலும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றி, நோயாளிகள் சரியான நேரத்தில் சரியான சிகிச்சையைப் பெறுவதை உறுதிசெய்ய முடியும் என நம்புகிறோம்” என்றார்.
15 நாட்களுக்கு ஒருமுறை இணையவழி கூட்டு ஆலோசனைக் கூட்டம்.
K-REC முன்னெடுப்பின் கீழ், நரம்பியல் நிபுணர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், கதிரியக்க நிபுணர்கள், மின் உடலியல் நிபுணர்கள், மருத்துவ உளவியலாளர்கள் மற்றும் மறுவாழ்வு நிபுணர்கள் அடங்கிய பன்முகத் துறைக் குழுவினர் (Multidisciplinary Team) தொடர்ந்து பணியாற்றவுள்ளனர்.
மூன்று கிளை மையங்களிலும் உள்ள மருத்துவக் குழுக்கள், நோயாளிகளைப் பற்றி விரிவாக விவாதிக்கவும், அவர்களின் உடல்நிலையின் சிக்கலான தன்மையை மதிப்பிடவும், 15 நாட்களுக்கு ஒருமுறை இணையவழியாக (Online) ஒன்றிணைந்து ஆலோசிக்க உள்ளனர். இதற்காக ஒரு பொதுவான ‘வலிப்பு நோய்ப் படிவமும்’ உருவாக்கப்பட்டுள்ளது.
மருந்துகளால் கட்டுப்படுத்தப்படாத தீவிர வலிப்புத்தாக்கங்கள் கொண்ட நோயாளிகள், மேலதிக உயர் பரிசோதனைகளுக்காகச் சென்னை ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையின் தலைமை வலிப்பு நோய் மையத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டு, அங்கு ‘வலிப்பு நோய் அறுவை சிகிச்சை’ மேற்கொள்ளப்படும். அறுவை சிகிச்சைக்குப் பின் தொடர் கண்காணிப்பிற்காக அவர்கள் மீண்டும் தங்களது பகுதிக்கு அருகிலுள்ள கிளை மருத்துவமனைக்கே மாற்றப்படுவார்கள். சரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளுக்குச் செய்யப்படும் இந்த வலிப்பு அறுவை சிகிச்சை மூலம் 75 விழுக்காடு வரையிலான நிகழ்வுகளில் வலிப்புத்தாக்கங்களிலிருந்து முழுமையான குணமடைதல் ஏற்படுவதுடன், நோயாளிகள் தினசரி உட்கொள்ளும் மருந்துகளின் அளவிலும் குறிப்பிடத்தக்கக் குறைப்பு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் உறுதியளித்துள்ளனர்.