ஆங்கிலேயர்களின் ஆதிக்கப்பிடியில் இருந்த இந்தியாவின், தென் தமிழகத்தில், ஜமீன் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கிராமத்தில், சாதிய பாகுபாடு. இதன் காரணமாக அந்த கிராமத்தை சார்ந்த தனுஷ், பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்கிறார். அங்கு சொந்த மக்களையே கொன்று குவிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதை எதிர்த்து அதிகாரிகளை கொல்கிறார். அதன் பிறகு பிரிட்டிஷ் ராணுவம் அவரை தேடப்படும் நபராக அறிவிக்கிறது. தலைமறைவாக இருக்கும் தனுஷ் புரட்சியாளர்களுடன் சேர்கிறார். இதன் பிறகு நடக்கும் அதிரடி ஆயுதப் போராட்டம் தான், கேப்டன் மில்லர்.
தனுஷ் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான தோற்றத்திலும், கதாபாத்திரத்திலும் அசத்தி வருகிறார். கேப்டன் மில்லர் படத்திலும் அனலீசன், கேப்டன் மில்லர் என இரண்டுவிதமான தோற்றங்களில் நடித்து, அவரது ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.
தனுஷின் பண்பட்ட நடிப்பும், ஸ்டைலும் கேப்டன் மில்லரை உயரத்திற்கு கொண்டு செல்கிறது. சிவராஜ்குமாருடனான எமோஷனல் காட்சியில் கண்கலங்க வைக்கும் அவர், பிரியங்கா மோகனுடனான காட்சியில் சிலிர்க்கவும் செய்கிறார். ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிகளிலும் சீட்டின் நுனிக்கு ரசிகர்கள் வந்து விடுகின்றனர்.
கதாநாயகியாக பிரியங்கா மோகன், கொடுத்த வேலையினை செய்திருக்கிறார். பெரிதாக கவரவில்லை!
ஒரு சில காட்சிகளில் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் நடித்திருந்தாலும் அந்த காட்சிகளில் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகின்றனர்.
காளி வெங்கட், இளங்கோ குமரவேல் இருவருமே சிறப்பாக நடித்திருக்கின்றனர். இவர்களோடு அப்துல் லீ, விஜி சந்திரசேகர், அருணோதயன், நிவேதிதா சதீஷ், வினோத் கிஷன் ஆகியோரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
படத்தின் உயிர்நாடி ஒளிப்பதிவு தான். ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி மிக சிரத்தையுடன் படம்பிடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளிலும், சேஸிங் காட்சிகளிலும் பிரம்மான்டத்தினை ஏற்ப்படுத்தியிருக்கிறார்.
அதேபோல் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை, திரைக்கதைக்கு விறுவிறுப்பினை கூட்டியிருக்கிறது. இசையும் ஒளிப்பதிவும் இணைந்து ஒரு கிளாசிக் கல்ட் காம்போவாக உருவெடுத்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் “கில்லர் கில்லர்…” உள்ளிட்ட அனைத்து பாடல்களும் சூப்பர்.
கலை இயக்குநர் டி.ராமலிங்கத்தின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்ட ஆயுதங்கள் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், ஒரு பிரமிப்பினை ஏற்படுத்திவிடுகிறது.
ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் வடிவமைத்த ஆக்ஷன் காட்சிகளும், சேஸிங் காட்சிகளும் பிரமிப்பு! தொழில் நுட்பத்தினை பொறுத்தவரை அனைத்துமே பிரமிப்பு தான்.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன், தெய்வ வழிபாடு, சாதிய பாகுபாடு, விடுதலை போராட்டம் இவைகளை ஒருங்கிணைத்து ஆக்ஷன் பிரியர்களுக்கான ஒரு படத்தினை உருவாக்கியிருக்கிறார்.
மொத்தத்தில், ஆங்கிலப்படங்களுக்கு நிகரான இந்த ’கேப்டன் மில்லர்’ தனுஷ் திரைப்பயணத்தில் முக்கியமான படம்.