‘ஹனு-மான்’ – விமர்சனம்!

தேஜா சஜ்ஜா, அம்ரிதா அய்யர், வரலட்சுமி சரத்குமார், வினய்ராய் , ராஜ்தீபக் ஷெட்டி, வெண்ணிலா கிஷோர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம், ஹனு மான். பிரசாந்த் வர்மா இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு தாசரதி சிவேந்திரன்,  இசை அனுதீப் தேவ், கௌரஹரி, கிருஷ்ணா செளரப் .

‘பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட்’ சார்பில், நிரஞ்சன் ரெட்டி தயாரித்துள்ள ஹனு மான் படத்தினை, ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ வெளியிட்டுள்ளது.

வினய்ராய், வெண்ணிலா கிஷோர் சிறுவயது முதலே ‘சூப்பர் மேன்’ படத்தினை பார்த்து வளருகின்றனர். ‘சூப்பர் மேன்’ போல் தங்களுக்கும் சக்தி கிடைக்க வேண்டும். என்று விரும்புகின்றனர். வாலிபர்களாக வளர்ந்து விட்ட நிலையில், ஓரளவு அவர்களின் விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் அவர்களுக்கு சில சக்திகள் கிடைக்கிறது. தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு கிராமத்தில் இருக்கும் நாயகன் தேஜா சஜ்ஜாவுக்கு, ஹனுமானின் ரத்தத் துளி மூலம் உருவான ஒரு ‘ருத்ரக் கல்’ கிடைக்கிறது. ஹனுமானின் சக்திக்கு நிகராக விளங்கும் அந்த கல்லின் மூலமாக, மக்களுக்கு நல்லது செய்கிறார். இந்த சக்தி வாய்ந்த கல்லினைப்பற்றி வினய்க்கு தெரிய வருகிறது. தனது விஞ்ஞான சக்திகளின் மூலமாக அந்தகல்லினை,  தேஜா சஜ்ஜாவிடமிருந்து பறிக்க முற்படுகிறார். அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் இடையே சண்டை நடக்கிறது. இறுதியில் என்ன நடந்தது? என்பது தான் ஹனுமான் படத்தின் கதை.

ஹனுமானின் ஆசி பெற்ற நாயகனாக நடித்திருக்கும் தேஜா சஜ்ஜா, ஒரு சில காட்சிகளிலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்து விடுகிறார். கல்லின் மூலம் கிடைக்கும் சக்திகளை, நடிகர் பாலய்யா திரையில் செய்யும் சாகசங்களோடு ஒப்பீடு செய்யும் காட்சிகள், சிரிப்பினை வரவழைக்கிறது. காமெடி, காதல், செண்டிமெண்ட், அடிதடி என எல்லாக் காட்சிளிலும் பாராட்டும் படியான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

நாயகியாக நடித்திருக்கும் அமிர்தா ஐயர், ஓகே! நாயகனின் அக்காவாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், தம்பியின் மேல் பாசம் காட்டும் காட்சிகளில் உருக உருக நடித்துள்ளார். சண்டைக்காட்சிகளில் தூள் பரத்துகிறார்.

வில்லனாக நடித்திருக்கும் வினய் ராய், சூப்பர் மேன் ஆகும் வெறியில், அட்டகாசமான வில்லத்தனத்தினை செய்திருக்கிறார்.

வழக்கமான, வெண்ணிலா கிஷோரின் காமெடிக் காட்சிகள், இந்தப்படத்தில் மிஸ்ஸிங்! இவருக்கு பதிலாக கடைக்காரராக, குருவிக்கூட்டுத் தலையுடன் வரும் சத்யா, சிரிக்க வைக்கிறார். இந்தக் காட்சிகள் சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

ஒளிப்பதிவாளர் தாசரதி சிவேந்திரனின் ஒளிப்பதிவும், கிராபிக்ஸ் காட்சிகளும் சிறப்பாக இருக்கிறது.

இசையமைப்பாளர்கள் ஹனுதீப் தேவ், கெளரஹரி, கிருஷ்ணா செளரப் ஆகியோரது இசை, காட்சிகளை மேம்படுத்துகிறது.

அளப்பரிய சக்திகளை வைத்துக்கொண்டு, பிறருக்கு உதவுபவன் மட்டுமே சூப்பர் மேன் அல்ல! என்ற் கருத்தினை வலியுறுத்தியிருப்பது சிறப்பு!

மொத்தத்தில், ‘ஹனு மான்’ சிறுவர்களுக்கன படம்!