இந்திய சுதந்திரதின 75வது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் ஆகஸ்டு 15-லிருந்து துவங்குகிறது.
கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டமும் வரும் செப்டம்பர் 5-லிருந்து தொடங்குகிறது.
இந்திய சுதந்திர போருக்கு எப்படி தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்ததோ, அதுபோல இந்திய சுதந்திரதின கொண்டாட்டத்திற்கும், தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.
50-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் வைரமுத்து அவர்களின் வரிகளில் பரத்பாலா அவர்களின் இயக்கத்தில், ‘தாய்மண்ணே வணக்கம்’ – ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் வெளியிடப்பட்டு இந்திய அளவில் பிரபலமானது.
வரும் 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழர்களின் தியாகத்தை உணர்த்தும் விதமாகவும் இந்தியாவெங்கும் இருக்கும் சுதந்திர வீரர்களின் பெருமைகளை போற்றும்படியும் ஏ.ராஜசேகர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் அருண்ராஜா காமராஜ் வரிகளில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் பிரமாண்டமாக மற்றுமொரு பாடல் உருவாகிறது.
இந்த பாடல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஒரியா, மராட்டி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, குஜராத்தி, கொங்கனி உள்ளிட்ட 12 மொழிகளில் உருவாகிறது.
இந்தியாவில் உள்ள முன்னணி திரைப்பட கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இப்பாடல் உருவாக்கத்தில் பங்கு கொள்ளவிருக்கிறார்கள்.
கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இயற்கை எழில் கொஞ்சும் பல்வேறு இடங்களிலும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களிலும் இப்பாடல் படமாக்கப்பட இருக்கிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காட்சி ஊடகங்களிலும் இப்பாடல் திரையிடப்பட இருக்கிறது.
இந்த பாடலின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் (FIRST LOOK MOTION POSTER) வெளியீடு வரும் செப்டம்பர் 5-ல் தொடங்கும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது ஆண்டு விழாவில் வெளியிடப்பட இருக்கிறது.
இவ்விழாவில், வ.உ.சி. எழுதிய அனைத்து நூல்களையும் உள்ளடக்கிய வ.உ.சி பெட்டகம்’ வெளியிடப்பட இருக்கிறது.
வ.உ.சி-யின் 150வது ஆண்டை குறிக்கும் பொருட்டு உலகெங்கும் இருக்கும் 150 தமிழ் ஆளுமைகள் எழுதும் ‘வ.உ.சி 150’ என்ற புத்தகம் வெளியிடப்படவிருக்கிறது.
இந்தியாவில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களில் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு தான் முதன் முதலில் அரசியல் வாழ்க்கை வரலாறு 1906-ல் எழுதப்பட்டது. வெள்ளையர்களால் இந்தியாவில் தடை செய்யப்பட்டு லண்டன் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுவிட்ட அந்த நூலை மீட்டெடுத்து ( நூலகர் மற்றும் ஆய்வாளர் திரு.ரங்கையா முருகன்) தமிழில் தமிழ்பெருஞ்சொல் வ.உ.சி. என்றும் ஆங்கிலத்தில் தி பிக் வேர்ட் வி.ஒ.சி. THE BIG WORD V.O.C.என்றும் வெளியிடப்படுகிறது.
இவையனைத்தும் ஆடியோ புத்தகமாகவும் (AUDIO BOOK ), வீடியோ புத்தகமாகவும் (VIDEO BOOK), கிண்டில் வர்ஷனாகவும் (KINDLE VERSION) வ.உ.சி. செயலியாகவும் (V.O.C. MOBILE APP) இலவசமாக டிஜிட்டலில் பதிவேற்றப்படவுள்ளது.
மாபெரும் இந்நிகழ்வை நல்லறிஞர்களின் துணை கொண்டு ‘சக்ரா அறக்கட்டளை’ நிறுவனர் சக்ரா ராஜசேகர் மற்றும் விதை புத்தக வெளியீட்டு நிறுவனர் ஆ.சுப்ரமணியன் இணைந்து முன்னெடுத்திருக்கிறார்கள்.