மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் ( MARS PRODUCTIONS) சார்பில், K. மனோகரன் தயாரித்துள்ள படம், சைத்ரா. இதில், யாஷிகா ஆனந்த், அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, கண்ணன், ரமணன், லூயிஸ், மொசக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொட்டு, கா போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய, M. ஜெனித்குமார்,கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
சைத்ரா (யாஷிகா ஆனந்த்), கதிர் (அவிதேஜ்) இருவரும் புது மணத் தம்பதிகள். இவர்கள் வசித்து வரும் வீட்டில் பேய் இருப்பதாக சைத்ரா கூறுகிறார். ஆனால் கதிர் அதை நம்ப மறுத்து டாக்டரிடம் அழைத்து செல்கிறார். டாக்டர், சைத்ராவிற்கு மனநோய் இருப்பதாக கூறி அதற்கான சிகிச்சை அளிக்கிறார். இந்நிலையில், சைத்ரா, கதிர் இருவரும் இறந்துபோன நண்பர்களை சந்திக்கின்றனர். அப்போது சைத்ரா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறார். இந்நிலையில், இவர்களுக்கு உதவி செய்ய ஒரு இன்ஸ்பெக்டரும், சாமியாரும் வருகின்றனர். இதன் பிறகு என்ன நடந்தது என்பதே, சைத்ரா படத்தின் மர்மமான, திகில் திரைக்கதை.
இதுவரை வெளியான பேய்ப் படங்களில் இருந்து, வித்தியாசமான கதையுடன், நான் லீனியர் திரைக்கதையில் சைத்ரா படத்தினை இயக்கியிருக்கிறார், இயக்குனர் M. ஜெனித்குமார். இடைவேளைக்கு முன்னர், படம் எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பதே புரியாத நிலையில், இடைவேளை வந்து விடுகிறது. அதன் பின்னர் தான், சுவாரசியமான முறையில் செல்கிறது. க்ளைமாக்ஸ் வரை, யூகிக்க முடியாத திருப்பங்களுடன் செல்லும், கதை, திரைக்கதையை யோசித்த இயக்குனர், அதை படமாக்கிய விதத்தில் கோட்டை விட்டுள்ளார். நடிகர்களின் நேர்த்தியற்ற நடிப்பு, சவுன்ட் எஃபெக்ட்ஸ், எடிட்டிங் ஆகியவை படத்தின் பலவீனம். படம் பார்ப்பவர்களின் கவனம் சிறிது சிதறினாலும், புரிவது கடினம்!
சிறிய பட்ஜெட்டில், வித்தியாசமான முறையில் கதை சொல்ல முயற்சித்த இயக்குனர் M. ஜெனித்குமாரை பாராட்டலாம். இதன் தொடர்ச்சியை கவனத்துடன் படமாக்கினால், பெரும் வெற்றி பெறும்!