லஞ்ச பூமி – விமர்சனம்!

பட்டுராம் புரொடக்‌ஷன் சார்பில், ஆர். செந்தில்குமார் தயாரித்து, பட்டுராம் செந்தில் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம், லஞ்ச பூமி. இதில், பட்டுராம் செந்தில், திருச்சி பாபு, ஆதேஷ்பாலா, சேரன்ராஜ் சுதாகர், அனு கிருஷ்ணா,  சாசனா ரோஸ், அமிர்தலிங்கம், நாமக்கல் குணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

புதியவர்களால் தயாரிக்கப்பட்டுள்ள லஞ்ச பூமி, நவம்பர் 10, முதல் ‘மூவி வுட்ஓடிடி’ தளத்தில் வெளியாகியுள்ளது.

திருச்சி பாபு, அரசியல், பணம் முதலான சகல பலமும் பொருந்திய ரௌடி. இவரது வீட்டினை, வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிடுகின்றனர். அப்போது, சோதனையிட வந்த வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு இரண்டு நிபந்தனைகளை விதிக்கிறார். அதாவது சோதனையிடாமல் சென்றால் பணம் தருவதாகவும், இல்லாவிட்டால் அவர்கள் உயிரை எடுத்து விடுவதாகவும், சொல்கிறார். அதிகாரி நேர்மையானவராக இருந்தாலும், ரௌடி திருச்சி பாபுவின் மிரட்டலுக்கும் பயந்து, பணம் வாங்கிக்கொண்டு சோதனையிடாமல் சென்றுவிடுகிறார். இந்த சம்பவத்தினை, டிவி ரிப்போர்ட்டர் சுதாகர் வீடியோ எடுத்துவிடுகிறார். அந்த வீடியோவை டிவி யின் அதிபர், சேரன்ராஜிடம் கொடுத்து ஒளிப்பரப்ப சொல்கிறார். ஆனால், அவர் ரௌடி திருச்சி பாபுவுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார். இதனால், கோபம் கொள்ளும் ரிப்போர்ட்டர் சுதாகர், தன்னிடம் இன்னொரு காப்பியிருப்பதாகவும் அதை மக்களுக்கு சொல்லிவிடுவதாக சொல்கிறார். இதனால் அவரை குடும்பத்துடன் கொன்று விடுகின்றனர். இதன் பிறகு என்ன நடந்தது என்பது தான், லஞ்ச பூமி படத்தின் கதை.

ரௌடிகளாக திருச்சி பாபுவும் ஆதேஷ் பாலாவும் மோசமில்லை! என்று சொல்லும் அளவிற்கு நடித்துள்ளார்கள். டிவி ரிப்போர்ட்டராக சுதாகரும் அவரது மனைவியாக  நடித்துள்ள அனு கிருஷ்ணாவும் நன்றாகவே நடித்துள்ளனர். ரௌடிகள் திருச்சி பாபுவையும், ஆதேஷ்பாலாவையும் பழிவாங்கும் இன்னொரு ரிப்போர்ட்டராக இயக்குநர் பட்டுராம் செந்தில் குறிப்பிடும் படி நடித்துள்ளார்.

பா. மோகன்ராம் இசையில் பாடல்களும் ஆணந்த ஜோதியின் பிண்ணனி இசையும் ஓகே! ஜி வி பிரகாஷ் ஒரு பாடலை நன் பாடியிருக்கிறார். கௌதம் கிருஷ்ணா, மகேஷ் இருவர்களின் ஒளிப்பதிவும் ஓகே தான்.

மொத்ததில், இயக்குநர் பட்டுராம் செந்தில் லஞ்ச பூமியாக மாறிவரும் நாடு, விழித்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.