தமிழ்நாட்டில் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி! – தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி!

TN Government Allows 6 AM Movie Shows!

தமிழ்நாட்டில் பண்டிகைக் கால வார இறுதிகளில் புதிய திரைப்படங்களை காலை 6 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை என மொத்தம் ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதி வழங்கியுள்ள தமிழ்நாடு அரசுக்குத் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகாலைக் காட்சிகள் நிறுத்தப்பட்டு, காலை 9 மணிக்கு மட்டுமே காட்சிகள் தொடங்கின. இதனால் அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டிற்குச் சமமான வெளியீட்டு வாய்ப்பு  இல்லாத நிலை நிலவி வந்தது.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஆலோசனைக் கூட்டத்தில் திரைத்துறையினர் விடுத்த கோரிக்கையைத் தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ஏ. ராஜ்மோகன் அவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இந்தச் சிறப்பு அனுமதியைப் பெற்றுத் தந்துள்ளார். இம்முடிவு சர்வதேசச் சந்தைகளுடன் ஒரே நேரத்தில் தமிழ்நாட்டிலும் திரைப்படங்கள் வெளியாக வழிவகுப்பதோடு, பாக்ஸ் ஆபீஸ் வசூலுக்கு மிகப்பெரிய உந்துதலாக அமையும் எனத் தயாரிப்பாளர்கள்  இதை வரவேற்றுள்ளனர்.

மேலும் ஏற்கனவே, கடந்த 2015 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்டு நிலுவையில் இருந்த 224 திரைப்படங்களுக்கான அரசு மானியத் தொகையை வழங்கி நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு நிதி ரீதியாக அரசு மிகப்பெரிய ஆதரவை வழங்கியிருந்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது சிறப்புக் காட்சிகளுக்கான இந்த புதிய அனுமதியும் வழங்கப்பட்டிருப்பது, தமிழ்த் திரைத்துறையின் வளர்ச்சியில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு கொண்டுள்ள தொடர்ச்சியான ஆதரவையும் அக்கறையையும் வெளிப்படுத்துவதாகத் தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் சூரியா நடிப்பில் உருவான ‘சீன்’ திரைப்படம் உள்ளிட்ட அனைத்து திரைப்படங்களும் காலை 6 மணிக்கு வெளியாகிறது!