அவ்னி சினி மேக்ஸ், பென்ஸ் மீடியா ஆகிய நிறுவனகளின் சார்பில் நடிகை குஷ்புவும், ஏ.சி.எஸ். அருண்குமாரும் இணைந்து தயாரித்துள்ள படம், காஃபி வித் காதல். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி) உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார், சுந்தர்.சி.
இயக்குனர் சுந்தர்.சி, லாஜிக்கை பற்றி பெரிதாக கவலை படாமல், ரசிகர்களுக்கு ஜாலியான பொழுது போக்கு படத்தினை கொடுப்பதில் அதிக கவனம் செலுத்துபவர். இந்தப்படத்திலும் அப்படியே தனது பாணியில் இயக்கியிருக்கிறார்..
கொடைக்கானலில் வசித்து வரும் பிரதாப் போத்தன், அருணா தம்பதியினருக்கு ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய், திவ்யதர்ஷிணி என 4 பிள்ளைகள். இதில் மூத்த மகன் ஶ்ரீகாந்த்துக்கும், கடைசி பிள்ளை திவ்யதர்ஷிணிக்கும் திருமணம் முடிந்த நிலையில். இன்னொரு மகன் ஜீவா, தன் காதலி ஐஸ்வர்யா தத்தாவுடன் லிவிங் டு-கெதர் உறவில் இருந்து வருகிறார். கடைசி பிள்ளையான ஜெய், பார்ப்பவர்களை எல்லாம் காதலித்து வருகிறார். அவரது சிறு வயது தோழியான அம்ரிதாவுக்கு ஜெய்யின் மேல் ஒருதலைக் காதல். திருமணமான ஶ்ரீகாந்த், ரைசா வில்சனுடன் உறவில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் பிரதாப் போத்தன், அருணா தம்பதியினர் ஜெய்க்கும், ஜீவாவுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர். அதன் படி மாளவிகா சர்மாவை ஜெய்க்காகவும், ரைசா வில்சனை ஜீவாவுக்கும் பேசி முடிக்கிறார்கள். ஆனால் மாளவிகா சர்மா ஜீவாவை விரும்புகிறார். இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வெட்டிங் பிளானர் யோகிபாபுவும், ரெடின் கிங்ஸ்லியும் வருகிறார்கள். இதன் பிறகு நடப்பது என்ன? என்ற, குழப்பமான கதைக்கு, ஜாலியான திரைக்கதை மூலம் முடிவு சொல்கிறார் இயக்குனர் சுந்தர்.சி.
ஸ்ரீகாந்த் தனது கதாபாத்திரம் உணர்ந்து அழகாக நடித்திருக்கிறார். ரைசாவிடம் நடத்தும் கூத்தும், அதன் பின்னர் அவரிடமும், மனைவியிடமும் மாட்டிக்கொண்டு முழிப்பதும் என சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஏமாற்றி சென்ற காதலியின் பிரிவாலும், தம்பிக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து விலகும் காட்சிகளும் ஜீவாவின் சிறந்த நடிப்பினை எடுத்து சொல்லும் காட்சிகள்.
ஜெய்க்கு ஏற்ற கதாபாத்திரம் என்பதால் அவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
ஐஸ்வர்யா தத்தாவும், ரைசா வில்சனும் ரசிகர்களை சூடாக வைத்திருப்பதற்கு பயன் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
சம்யுக்தா, டிடி, மாளவிகா, அம்ரிதா ஆகியோர் சென்டிமென்ட் காட்சிகளுக்காக பயன் படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதில் அதிகமாக ரசிகர்கள் மனதில் டிடியும் அடுத்த படியாக அம்ரிதாவும் இடம் பிடிக்கின்றனர்.
யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி கூட்டணி சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்கள்.
மொத்தத்தில் சுந்தர் சியின் வழக்கமான கலர்ஃபுல்லான, ஜாலியான படம் காஃபி வித் காதல்.