லவ் டுடே – விமர்சனம்!

ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில், கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம், லவ் டுடே. இப்படத்தை ஜெயம் ரவி நடித்து வெளியான ‘கோமாளி’படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து, இயக்கியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இவர்களுடன் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகிபாபு, ரவீணா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரதீப் ரங்கநாதனும், இவானாவும் காதலிக்கிறார்கள். இது இவானாவின் அப்பா சத்யராஜுக்கு தெரிய வருகிறது. அப்போது அவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்து ஒரு நிபந்தனை விதிக்கிறார். அதாவது பிரதீப் ரங்கநாதனும், இவானாவும் ஒரு நாள் முழுவதும் அவர்களின் செல்போனை இருவருக்குள்ளும் மாற்றி கொள்ள வேண்டும். இது போதாதா? கதலர்களுக்குள் பிரச்சனை ஏற்படுகிறது. இருவரும் சேர்ந்தார்களா? பிரிந்தார்களா? என்பது தான் லவ் டுடே படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்.

கதாநாயகனாக நடித்திருக்கும் படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், நடிகராக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். காமெடி, காதல், எமோஷ்னல் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். சில இடங்களில் ஓவராக்டிங்!

கதாநாயகியாக நடித்திருக்கும் இவானா, அழகாகவும் சிறப்பாகவும் நடித்திருக்கிறார். காதல், மகிழ்ச்சி, துக்கம், கோபம் என அனைத்து விதமான உணர்வுகளையும் வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதில் இடம் பெறுகிறார்.

இவானாவின் அப்பாவாக வேணு சாஸ்திரி, என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் சத்யாரஜ். கதாபாத்திரத்திற்கேற்ற கச்சிதமான நடிப்பு.

பிரதீப் ரங்கநாதனின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா, மகனுக்கு சொல்லும் அறிவுரை அனைவரும் ஏற்கும்படி இருக்கிறது.. கண்டிப்பதிலும், பாசம் காட்டுவதிலும் அம்மாவாக ரசிகர்கள் மனதில் நிறைகிறார்.

யோகி பாபுவுக்கு அருமையான குணச்சித்திரக் கதாபாத்திரம்.. நெகிழச் செய்கிறார்.

பிரதீப் ரங்கநாதனின் நண்பர்களாக நடித்த அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். அதிலும் ஆதித்யா கதிர் அதிகம் கவனம் பெறுகிறார். நண்பர்கள் வரும் காட்சிகளிலெல்லாம் தியேட்டரில் சிரிப்பலை எழுகிறது. அதில் சில இடங்களில் ஆபாச வசனங்களும் இடம் பெறுகிறது. அது முகம் சுளிக்க வைக்கிறது.

சோஷியல் மீடியாக்களின் அத்துமீறல்களை சில இடங்களில் காமெடியாகவும், சில இடங்களில் பயமுறுத்தும் விதத்திலும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

சில காட்சிகள் ஆபாசாமாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் லவ் டுடே சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.