டி 3 (D 3) – விமர்சனம்!

‘பீமாஸ் என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தின் சார்பில், மனோஜ் எஸ் தயாரித்துள்ள திரைப்படம், டி 3 (D 3).  இதில் பிரஜின், வித்யா பிரதீப், காயத்ரி யுவராஜ், சார்லி, ராகுல் மாதவ், மேத்யூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டி 3’ படத்தை பாலாஜி எழுதி, இயக்கியுள்ளார்.  3 பாகங்களாக உருவாகியுள்ள ‘டி 3’ படத்தின் கடைசி பாகம் வெளியாகியுள்ள நிலையில், இதன் முந்தைய 2 பாகங்கள் விரைவில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

காவல் துறையில் ஆய்வாளராக பணிபுரியும் பிரஜின், தனது மனைவி வித்யா பிரதீப்புடன், பணி மாறுதல் காரணமாக குற்றாலம் வருகிறார்.  அங்குள்ள டி 3, காவல் நிலையத்தில் பணியேற்கிறார். அப்போது, அவரது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மர்மமான முறையில், இளம் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி பலியாகிறார்.

இதனை விசாரிக்கும் பிரஜின், கடும் அதிர்ச்சியாகிறார். அதன்பிறகு அவரது தீவிர விசாரணையில் குற்றவாளியை நெருங்குகிறார். இதனால், அவரது மனைவி கொல்லப்படுவதுடன், பிரஜின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அதிலிருந்து பிரஜின் தப்பித்தாரா? குற்றவாளியை பிடித்தாரா? என்பது தான் ஒரு நாளில் நடக்கும் சஸ்பென்ஸ், த்ரில்லர் ‘டி3’ படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

படம் ஆரம்பம் முதல் இறுதிவரை, ஒரு நல்ல டீசன்டான சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் பார்த்த திருப்தி ஏற்படுகிறது. இருந்தாலும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணியிருக்கலாமோ!? என்ற எண்ணம் வருவதையும் தடுக்கமுடியவில்லை! படம் ஆரம்பித்த சிலகாட்சிகளில் தட தடக்கும் திரைக்கதை, அதன்பிறகு மெதுவாக செல்கிறது. ஆனால் அவ்வளவாக போரடிக்கவில்லை!  அடிக்கடி படம் பார்க்கும் ஒரு சிலரால் குற்றவாளியை யூகித்துவிடமுடியும்!

இன்ஸ்பெக்டராக நடித்துள்ள பிரஜின் பாராட்டும் படியே நடித்திருக்கிறார். டாக்டராக வரும் ராகுல் மாதவும் ஓகேவான நடிப்பினை கொடுத்திருக்கிறார். அவருக்கு கீழ் வரும் அடியாளாக நடித்திருப்பவர் பெரிதாக மனம் கவரவில்லை!  பிரஜினின் மனைவியாக நடித்திருக்கும் வித்யா பிரதீப், ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.  போலீஸ் எஸ்.பி ஆக நடித்திருக்கும் மேத்யூ வர்கீஸூம் ஓகேவான நடிப்பினை கொடுத்திருக்கிறார்.

பி.கே. மணிகண்டனின் ஒளிப்பதிவு பாராட்டும் படி இருக்கிறது. படத்தின் பெரும் பலவீனமாக இருப்பது, சவுண்ட் எஃபெக்ட்ஸ் தான்.  வசனக் காட்சிகளை விட, பாடல் காட்சியையும், சண்டை காட்சிகளையும் பலவீனப்படுத்துகிறது. அதேபோல், ஸ்டண்ட் மாஸ்டர் ராம்போ விமல் அமைத்த சண்டைக் காட்சிகள் பெரிதாக எடுபடவில்லை! அதிலும் சப்வே யில் நடக்கும் சண்டைக்காட்சி மிக மோசம்!

மற்றபடி எதுவும் குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் இல்லை!

நீங்கள் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் பார்ப்பவராக இருந்தால், இந்தப்படத்தை பார்க்கலாம். ஆனால் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் செல்வது சிறப்பு!