ராஜா மகள் – விமர்சனம்!

ஆடுகளம் முருகதாஸ், வெலினா இருவரும் இணைந்து நடித்திருக்கும் ‘ராஜா மகள்’ படத்தின், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், சிறுமி ப்ரதிக்‌ஷா. இவர்களுடன் மறைந்த நடிகர் ப்ளோரன்ட் சி பெரைரா, மற்றும் பக்ஸ், ஃப்ராங்க்ளின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் ஹென்றி எழுதி, இயக்கியிருக்கிறார்.

ஆடுகளம் முருகதாஸ், தன்னுடைய மகள், சிறுமி ப்ரதிக்‌ஷா மேல் அளவு கடந்த அன்பை வைத்திருப்பவர். செல்போன் சர்வீஸ் செய்து வருவதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயில், மனைவி, மகள் என, எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருபவர். அவர் மகளுக்காக தன்னுடைய சக்திக்கு மீறி, எதை கேட்டாலும் வாங்கி கொடுத்து விடுவார். இல்லை என்றே சொல்லமாட்டார்.

இந்நிலையில், சிறுமி ப்ரதிக்‌ஷாவுடன் படிக்கும் பணக்கார வீட்டுப் பையன், தனது பிறந்த நாளை தன்னுடன் படிக்கும் சக நண்பர்களுடன், வெகு ஆடம்பரமாக கொண்டாடுகிறான். அப்போது ப்ரதிக்‌ஷா அந்த பையனின் ஆடம்பரமான வீட்டைப் பார்த்து பிரமிப்பு அடைகிறார்.

வழக்கம்போல் தனது தந்தை ஆடுகளம் முருகதாஸிடம், அதை போன்ற ஒரு வீடு வேண்டும் என அடம் பிடிக்கிறார். அவரும் வாங்கித் தருவதாக உறுதி அளிக்கிறார். மகளின் விருப்பத்தை நிறைவேற்றினாரா? என்பதே ‘ராஜா மகள்’ படத்தின் கதை.

இயக்குனர் ஹென்றி, மகளின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் தந்தையின் வேதனையை பதிவாக்க முயற்சித்தாரா? இல்லை, குழந்தைகளை எப்படி வளர்க்கக்கூடாது என்பதை, பதிவு செய்ய முயற்சித்தாரா? தெரியவில்லை! குழப்பமே, எஞ்சி நிற்கிறது.

எல்லா அப்பாக்களுக்குமே, குழந்தைகளின் நியாயமான தேவைகளை, பூர்த்தி செய்யமுடியாமல் போகும் போது ஏற்படும் வலியும், வேதனையும் துயரத்தின் உச்சம். அதை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், கிடைக்கும் சொற்ப வருமானத்தில் மகளின் விருப்பத்திற்காக, ஆடம்பர பங்களாவை வாங்க விரும்பினால், அந்த வலியும் வேதனையும் ஏற்படுமா?

மகளுக்காக, ஆடம்பர பங்களாவை வாங்க நினைக்கும் ஆடுகளம் முருகதாஸ், தன்னிலை உணராமல், தனது வியாபாரத்தை விரிவு படுத்த நினைக்காமல், சட்டவிரோத செயல்கள் செய்யத்துணிவது என, அனைத்துமே முரணான காட்சிகள். ஒரு காட்சியில் கூட அவரது வேதனைகள் நியாயமானதாக தெரியவில்லை!

க்ளைமாக்ஸ் காட்சியில், சிறுமி ப்ரதிக்‌ஷா நடந்து கொள்ளும் விதம் எதை பிரதிபலிக்கிறது?

தந்தைக்கும், மகளுக்குமான பாசப் போராட்டத்தை தேர்வு செய்த இயக்குனர் ஹென்றி, அதற்கான திரைக்கதையில், கவனம் செலுத்தவில்லை!

ப்ரதிக்‌ஷாவை அவர் படிக்கும் பள்ளியின் மரத்தின் பின்னால் நின்றபடி, பார்க்கும் காட்சியில் ஆடுகளம் முருகதாஸூம், வெலினாவும் பார்வைகளினாலேயே நடித்து, ரசிகர்களின் மனதில் நிறைகிறார்கள். உணர்வு பூர்வமான நல்ல காட்சி!

சிறுமி ப்ரதிக்‌ஷா பல காட்சிகளில் நன்றாக நடித்திருந்தாலும், சில காட்சிகளில் வயதினை மீறிய நடிப்பாக இருக்கிறது.

படத்தில் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை! அதேபோல், ஒளிப்பதிவும்!

இயக்குனர் ஹென்றி இன்னும் கொஞ்சம் கவனமுடன் இருந்திருந்தால் சிறப்பான படமாக இருந்திருக்கும்!