உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம், ‘தெய்வ மச்சான்’. இதில் விமல், நேஹா ஜா, பால சரவணன், வத்சன் வீரமணி, அனிதா சம்பத், பாண்டியராஜன், நரேன், தீபா ஷங்கர், கிச்சா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் காலம் காலமாக வந்து கொண்டிருக்கும் படங்களின் சாயலிலேயே இந்தப்படமும் வந்திருக்கிறது. சற்றே கலகலப்பான திரைக்கதையில்.
விமலின் கனவில் அய்யனார் தோற்றத்தில் வரும், வேல. ராமமூர்த்தி சிலரது மரணத்தை முன்கூட்டியே சொல்கிறார். அது அப்படியே நடக்கிறது. இதனால் அதிர்ச்சியடைகிறார், விமல்.
இந்நிலையில், வத்சன் வீரமணிக்கும் விமலின் தங்கை அனிதா சம்பத்துக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. கல்யாண வேலைகள் ஜரூராக நடந்துவரும் நிலையில், வேல.ராமமூர்த்தி மீண்டும் விமலின் கனவில் வந்து, உன் தங்கையின் கனவன்( மச்சான்) இரண்டு நாட்களில் இறந்து விடுவான், என சொல்கிறார். இதனால் கடும் அதிர்ச்சியடையும் விமல், அந்தக் கல்யாணத்தை தடுக்க முயற்சி செய்கிறார். ஆனால் கல்யாணம் நடந்து விடுகிறது. இதன் பின்னர் என்ன நடந்தது என்பதே, ‘தெய்வ மச்சான்’ படத்தின் கதை.
இயல்பான தோற்றத்தில் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுபவர் நடிகர், விமல். இந்தப்படத்திலும் ரசிகர்களை அப்படியே கவர்ந்து விடுகிறார். நேஹா ஜா, பால சரவணன், வத்சன் வீரமணி, அனிதா சம்பத், பாண்டியராஜன், நரேன், தீபா ஷங்கர், கிச்சா ரவி ஆகியோரும் கதாபாத்திரங்களுக்கேற்றபடி நடித்திருக்கிறார்கள்.
படத்தின் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம். திரைக்கதை தொய்வடையும் இடங்களில், பால சரவணனின் காமெடி அதை ஈடுசெய்கிறது. எதார்த்தமான வசனங்கள் கவனம் பெறுகிறது.
ஒளிப்பதிவும், இசையும் ஓகே.
சாதரண திரைக்கதையில், விமல் – பாலா சரவணன் கூட்டணியில் ஒரு நகைச்சுவை படம்.
எதிர் பார்க்காமல் போனால் சிரிக்கலாம்.