‘யாத்திசை’ – விமர்சனம்!

ஓவியர் வீரசந்தானம், வீர எயினன், தமிழ் மாறன் ஆகியோரது நடிப்பினில், தரணி ராசேந்திரன் எழுதி, இயக்கியிருந்த படம், ‘ஞானச்செருக்கு’.

இதற்கு பின்னர், தரணி ராசேந்திரன் எழுத்து, இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம், யாத்திசை.

சோழர்கள், பாண்டிய மன்னன் ரணதீரன் பாண்டியனிடம், கோட்டையை பறி கொடுத்து விட்டு, எயினர் குடியின் தலைவன் கொதியின் உதவியுடன், சோழர்கள் தங்களது கோட்டையை மீட்பது போன்ற சம்பவத்தை படமாக்கியிருக்கிறார்கள். இச்சம்பவம் 7 ஆம் நூற்றாண்டில் நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தான் யாத்திசை படத்தின் கதை!

எயினர் குடியினரை வீரம் மிகுந்தவர்களாகவும், பலசாலிகளாகவும் காட்ட முயற்சித்த இயக்குநர் தரணி ராசேந்திரன், அக்குடியினரை இழிவு படுத்தியிருப்பதாகவே, அவரது காட்சிப்படுத்தலில் புரிகிறது.

யாத்திசை, முழுக்க முழுக்க இயக்குநர் தரணி ராசேந்திரனின் கற்பனை மட்டுமே.  இதில் தமிழர்களின் சில குறியீடுகள் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது வெவ்வேறு காலக்கட்டங்களில் நடந்த சம்பவங்கள் ஒரே காலக்கட்டத்தில் நடப்பது போன்று சித்தரித்தரிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக போருக்கு முன்னர், வெல்லவே சாத்தியமில்லாத ஒரு அரசனை எதிர்த்து வெல்ல முற்படும் போது கொடுக்கப்படும் ஒரு பலி. இது நவகண்டம் என்று சொல்லப்படும்.  உடலின் ஒன்பது இடங்களில் அரிந்து கொண்டு, தன்னை ஓருவர் ‘கொற்றவை’க்கு பலி கொடுக்கும் முறை தான் நவகண்டம். இந்த வகையான ஒரு பலி கொடுத்து கொள்ளும் பழக்கம் 11 ஆம் நூற்றாண்டில் இருந்தது. ஆனால்  ‘யாத்திசை’ நடக்கும் காலம் 7 ஆம் நூற்றாண்டு!

எயினர்கள் பாலை நிலத்தில் வாழும் வேட்டை மரபினர். இவர்கள் அம்புகள் எய்வதில் வல்லவர்கள். மிகுந்த திறமைசாலிகள். ‘பாகுபலி’ படத்தில் பிரபாஸ் அனுஷ்காவுக்கு ஒரே சமயத்தில் பல அம்புகள் விட சொல்லிக்கொடுப்பது போன்ற ஒரு காட்சி வருமல்லவா! அதைப் போன்ற திறமை மிகுந்தவர்கள்.

சங்ககால புலவர்களில் ஒருவரான நத்தத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட ‘சிறுபாணாற்றுப்படை’ யில் எயினர்கள் வறுமையில் வாழும் போதும் பிறருக்கு உணவு கொடுத்து உதவும் பழக்கமும் இருந்ததாக ஒரு குறிப்பு உள்ளது.

இப்படிப் பட்ட ஒரு எயினர் குடியை மிகவும் மோசமான காட்டுமிராண்டிகளாக சித்தரித்திருக்கிறார், இயக்குநர் தரணி ராசேந்திரன்.

இயக்குநர் தரணி ராசேந்திரன், மெல் கிப்சன் இயக்கி, ரூடி யங்பிளட், ஜோனாத்தன் பிரேவர், தலியா ஹெர்னாண்டஸ் நடிப்பில், வெளியான ‘அபோகலிப்டோ’ (Apocalypto) படத்தின் மிகப்பெரும் ரசிகர் போல!? எயினர்களை மிகப்பெரும் காட்டுமிராண்டிகளாக காட்டியிருக்கிறார்.

எயினர்கள் கதை இப்படியிருக்க, பாண்டியர்களின் கதை இன்னும் மோசம்.

பாண்டிய மன்னர், அரிகேசரி மாறவர்மன்.  ‘கூன்பாண்டியன்’ எனறும் அழைக்கப்பட்டார். இவர், சோழ நாட்டின் உறையூரை ஆட்சி செய்து வந்த மணிமுடிச் சோழனை போரில் வென்றார். இதன் பிறகு நட்பு நீடிக்க, மணிமுடிச் சோழனின் மகள், இளவரசி மங்கையர்க்கரசியை மணம் முடித்துக்கொண்டார்.

பாண்டிய மன்னர், அரிகேசரி மாறவர்மன் – சோழ இளவரசி மங்கையர்க்கரசி இவர்களின் வாரிசே,‘ கோச்சடையன்’ ரணதீரன். இயக்குநர் தரணி ராசேந்திரன், யாத்திசை கதைப்படி, ரணதீரன் சோழர்களின் கோட்டையை கைபற்றியதாக கூறுகிறார். எப்படி, ஏன் கைபற்றினான்? இப்படி ஒரு சம்பவம் நடந்ததா? அதற்கான காட்சிகளோ, விளக்கமோ இல்லை.

எயினர்களிடமிருந்து மீண்டும் கோட்டையை கைபற்ற பாண்டிய மன்னன் ரணதீரன், பெரும்பள்ளிக் குடியினரின் தலைவி மகளை திருமணம் செய்து கொண்ட பிறகு வரும் காட்சியும், வசனமும் ரணதீரனை அவமதிக்கும் காட்சி.

யாத்திசை வரலாறு அல்ல. புனைவு என்று சொல்லும் இயக்குநர் தரணி ராசேந்திரன், கற்பனை பெயர்களை கொண்டு திரைக்கதை எழுதியிருக்க்லாம். வரலாற்று பெயர்களை வைத்து எடுத்திருப்பதன் உள்நோக்கம் என்னவோ!?

ரணதீரனாக நடித்த சக்தி மித்ரன், எயினர்கள் குலத் தலைவனாக நடித்த சேயோன் உள்ளிட்டவர்கள் இயக்குநரின் விருப்பத்திற்கேற்றபடி, நடித்திருக்கிறார்கள். சில காட்சிகளில் மிகையாகவும் நடித்திருக்கிறார்கள். படம் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகள் வாய்பிளந்து பார்க்க வைத்தாலும், மிகையான காட்சிகள் ஒரு விதமான சலிப்பை ஏற்படுத்துகிறது. ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்தவரை பாராட்டலாம்.

ஒளிப்பதிவு ஓகே. கிராபிக்ஸ் காட்சிகள், சூப்பராக இல்லை என்றாலும் பரவாயில்லை! காட்சிகளுக்கேற்ற பின்னணி இசை இல்லை. இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம்.

இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்த இயக்குநர் தரணி ராசேந்திரனின் உழைப்பை பாராட்ட வேண்டும். படத்தில் பணியாற்றிய அனைவரது முயற்சியும், உழைப்பும் அளப்பரியாதது. பாராட்டும், வாழ்த்துகளும்.

கதை, திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி, கிடைத்த தரவுகளை மேற்கோள் காட்டி எடுத்திருந்தால், மிகப்பெரும் பாராட்டையும், வெற்றியையும் பெற்றிருக்கும்!