தேஜாவு – விமர்சனம்!

ஒயிட் கார்ப்பெட் பிலிம்ஸ் சார்பாக கே.விஜய் பாண்டி தயாரித்திருக்க, அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘தேஜாவு’. நடிகர் அருள் நிதி, நடிகை ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் இணைந்து நடித்திருக்க, இவர்களுடன் அச்யுத் குமார், மதுபாலா, சேத்தன், காளி வெங்கட், ராகவ் விஜய், மைம் கோபி உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.

தேஜாவு எப்படி இருக்கிறது? பார்க்கலாம்!

அச்யுத் குமார் ஒரு கதாசிரியர் எந்நேரமும் போதையிலிருப்பவர். ஒரு நாள் இவர் எழுதிய கதாபாத்திரம் ஒன்று அவரை கொலை செய்வதாக மிரட்டுகிறது. இதனால் மிரண்டுபோகும் அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். அன்றிரவு போலீஸ் உயரதிகாரி மதுபாலாவின் மகள் ஸ்மிருதி வெங்கட், போலீஸ் அவசர உதவி எண்ணுக்கு போன் செய்து தான் கடத்தப்பட்டதாக தெரிவித்து உதவி கேட்கிறார். அதோடு அச்யுத் குமாரின் பெயரையும் சொல்ல போன் துண்டிக்கப்படுகிறது.

அச்யுத் குமாரை நெருக்கமாக கண்காணிக்கிறது போலீஸ். அப்போது அவர் எழுதுவது எல்லாம் அப்படியே நடக்க, போலீஸ் குழப்பமடைகிறது. உண்மையிலேயே அவர் எழுதுவது எல்லாம் நடக்கிறதா? இல்லையா? கடத்தப்பட்ட உயரதிகாரி மதுபாலாவின் மகள் கிடைத்தாரா? என்பது தான் ‘தேஜாவு’ படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

தேஜாவு படத்தின் இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் யாரிடமும் உதவி இயக்குனராக பயிற்சி பெறாதவர். இயக்குனராக அறிமுகமாகும் இந்தப்படத்திலேயே குறிப்பிட்ட அளவுக்கு கவனம் பெறுகிறார். ஒரு இன்வெஸ்டிகேஷன் த்ரில்லைருக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை மெதுவாக சென்றாலும் க்ளைமாக்ஸை நெருங்கும்போது சில டிவிஸ்ட்டுக்கள் ஆச்சர்யப்படுத்துகிறது.

கதாபாத்திரங்களுக்கேற்ற நடிகர்களை தேர்ந்தெடுப்பதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். மதுபாலா. அச்யுத்குமார் இருவரும் கதாபாத்திரங்களுக்கேற்ற வகையில் சரியாக பொருந்தவில்லை. அச்யுத்குமார் நடித்திருக்கும் காட்சிகளில் அவருக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கரே நம் நினைவில் நிற்கிறார்..

அருள்நிதி தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்துள்ளார் குறை சொல்ல முடியாத நடிப்பு. சேத்தன், காளி வெங்கட், ராகவ் விஜய், மைம் கோபி ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களில் கச்சிதமாக பொருந்துகிறார்கள்.

பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவும் ஜிப்ரானின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் எல்லோரும் பார்க்கும்படியான ஒரு படமாக இருந்திருக்கும்.

இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படங்களை விரும்பிப்பார்ப்பவர்களுக்கு இது பிடிக்கும். ஒருமுறை பார்க்கலாம்.!