சிவி 2 – விமர்சனம்!

கே.ஆர்.செந்தில் நாதன் இயக்கத்தில் தேங்காய் சீனிவாசனின் பேரன் யோகி, ஜெயசிறீ, அனுஜா ஐயர் ஆகியோர் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டில் வெளிவந்த படம், சிவி. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் தாய்லாந்து மொழியில் உருவான ‘ஷட்டர்’ படத்தின் மறு உருவாக்கம். சிவி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவி 2 வெளியாகியிருக்கிறது.

இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த தேங்காய் சீனிவாசனின் பேரன் யோகியுடன், நடிகர் சரண் ராஜ்ஜின் மகன் தேஜா சரண்ராஜ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த, இவர்களுடன்  சுவாதிஷா, சந்தோஷ், கிறிஸ்டின், தாடி பாலாஜி, சாம்ஸ், கோதண்டம், காயத்திரி, குமரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

2007 ஆம் ஆண்டு வெளியான ‘சிவி’ படத்தினை போன்றே ‘சிவி 2’ வும் மிரட்டுகிறதா? பார்க்கலாம்.

நண்பர்கள் 8 பேர் கொண்ட ஒரு குழுவினர், அமானுஷ்ய விஷயங்களை போலியாக ஒளிப்பதிவு செய்து, சமூக வலை தளத்தில் வெளியிட்டு, அதன் மூலம் பணம் சம்பாதிக்க ஆசைப்படுகின்றனர். இதை தெரிந்து கொள்ளும் ஒருவர், அவர்களிடம் போலியான வீடியோக்களை எடுக்காமல் பல வருடமாக மூடப்பட்டிருக்கும் ஒரு மருத்துமனையில் அமானுஷ்யங்கள் நிறைந்திருப்பதாக கூறுகிறார். மேலும் அங்கு நடக்கும் அமானுஷ்யங்களை வீடியோ எடுத்து செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தினை பங்கிட்டுக் கொள்ளலாம் என கூறுகிறார். கூறியபடியே அவர்கள் வீடியோ எடுக்க அந்த மருத்துவமனைக்குள் செல்கின்றனர். உள்ளே சென்றவர்கள் உயிருடன் வந்தார்களா? இல்லையா? என்பது தான் ‘சிவி 2’ படத்தின் மீதிக்கதை..

இதற்கு முன்னர் வெளியான ‘சிவி’ திரைப்படத்தில் சில குறைகள் இருந்தாலும் அந்தப்படம் ரசிகர்களால் பாரட்டப்பட்டது. இந்தப்படத்தில் இயக்குனர் திரைக்கதையின் மீதும், காட்சியமைப்பின் மீதும் அக்கறை கொள்ளவில்லை! படத்தில் நடித்த நடிகர், நடிகைகளைப் பற்றி சொல்லவும் எதுவும் இல்லை! ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான தாடி பாலாஜி, கோதண்டம், சாம்ஸ் இவர்களில் சாம்ஸ் படம் முழுவதிலும் வருகிறார். இருந்தபோதும் ஒரு சில காட்சிகளிலேயே மனதில் நிற்கிறார்.

தொழில்நுட்பம் மொத்தமும் படு மோசம்! மற்றபடி படத்தினில் குறிப்பிட்டு சொல்லும்படியான தரமான காட்சிகள் ஒன்றுகூட இல்லை!

மொத்தத்தில் இயக்குனர் கே.ஆர்.செந்தில் நாதன், ‘பெப்பே’ காட்டியிருக்கிறார்….