‘டிமான்ட்டி காலனி 2’ – விமர்சனம்!

அருள்நிதி, பிரியா பவானி சங்கர் , ஆண்டி ஜாஸ் கெலைனன், டிசெரிங் டோர்ஜி, அருண்பாண்டியன், முத்துக்குமார் ,மீனாட்சி கோவிந்தராஜன் , சர்ஜனோ காலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்துள்ள படம், டிமான்ட்டி காலனி 2.  அஜய் ஆர் ஞானமுத்து இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு ஹரீஷ் கண்ணன், இசை சாம் சி எஸ்.

முதல் பாகமான, டிமான்ட்டி காலனி திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியிலிருந்து தொடங்குகிறது, டிமான்ட்டி காலனி 2 திரைப்படம். இது, டிமான்ட்டி காலனி திரைப்படத்தின் முதல் பாகத்தினை பார்க்காதவர்கள், அடுத்தடுத்து கதை போகும் போக்கினை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது.

பிரியா பவானி சங்கரும், அருண் பாண்டியனும் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் அருள் நிதியை காப்பாற்றி, அவர்களுக்கு சொந்தமான மருத்துவமனையிலேயே சிகிச்சை கொடுத்து வருகின்றனர். இதற்கிடையே, பிரியா பவானி சங்கரின் கணவனான சர்ஜனோ காலித், தற்கொலை செய்து கொள்கிறார். தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தினை அறிய, பிரியா பவானி சங்கர் விரும்புகிறார். இதற்காக புத்தமத துறவிகளின் உதவியை நாடுகிறார். அவர்கள், பிரியா பவானி சங்கரை மந்திர சக்திகளின் மூலம், ஆவிகளின் உலகத்திற்குள் அனுப்புகின்றனர். அங்கு வேறு ஒருவரின் ஆவி அவர்களின் உதவியை கேட்கிறது. அதன் பிறகு, ஆவிகளின் தலைவனிடம் புத்த மத துறவி, பிரியா பவானி சங்கர் அருள் நிதி ஆகியோர் சிக்கிக் கொள்கின்றனர். புத்தமத துறவி கொல்லப்படுகிறார். அருள் நிதி, பிரியா பவானி சங்கர் அங்கிருந்து தப்பித்தார்களா, இல்லையா? என்பதே டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்தின் கதை.

அருள்நிதி, தனக்கு கிடைத்த காட்சிகளில் அழகாக நடித்திருக்கிறார். சொத்துக்காக சண்டையிட்டு கொள்ளும் காட்சிகளிலும், பிரியா பவானி சங்கருடன் பேயிடம் மாட்டிக்கொண்டு, வெளியேற முடியாமல் தவிக்கும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

பிரியா பவானி சங்கருக்கு, நடிப்பினை வெளிப்படுத்தும் காட்சிகள் அதிகம்.  ஒரு சில காட்சிகள் தவிர்த்து, நன்றாக நடித்திருக்கிறார்.

மற்றபடி, அருண் பாண்டியன், , முத்துக்குமார் ,மீனாட்சி கோவிந்தராஜன் , சர்ஜனோ காலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோர் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.

திகில் காட்சிகளுக்கு, ‘சாம் சி எஸ்’ பின்னணி இசை, வலு சேர்க்கிறது.

ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு, திகில் ஏற்படுத்துகிறது.

இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் திரைக்கதையில், திகில் காட்சிகள் குறைவு. இதனால் திகில் காட்சிகளை எதிர்பார்த்து வருபவர்கள் ஏமாற்றம் அடைவர்!