‘ஹோம்பாலே பிலிம்ஸ்’ சார்பில், விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ள திரைப்படம், ரகு தாத்தா. இதில் கீர்த்தி சுரேஷ் , ரவீந்திர விஜய், எம் எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ஆனந்தசாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன், ராஜீவ் ரவீந்தரநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார், சுமன் குமார். இசை ஷான் ரோல்டன்,ஒளிப்பதிவு யாமினி யக்ஞமூர்த்தி, படத்தொகுப்பு டி.எஸ். சுரேஷ்.
ரகு தாத்தா திரைப்படத்தின் கதை காலக்கட்டம், 1970 களில் (யூகமாக) நடப்பது போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
புனை பெயரில் கதைகளை எழுதி வரும் கீர்த்தி சுரேஷ், வங்கியில் குமாஸ்தாவாக பணிபுரிபவர். பெண்ணியம் பேசும் புரட்சிகரமான எழுத்தாளரின் தீவிரமான விசிறி. அவர் வசிக்கும் பகுதியில் ‘ஹிந்தி சபா’ அமைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கு அவரது தாத்தா எம். எஸ். பாஸ்கர் ஆதரவு. கீர்த்தி சுரேஷின் ஒத்த கருத்தினை கொண்ட ரவீந்திர விஜய், அவரை விரும்புகிறார். இதனால், இரு வீட்டினரும் இவர்களது திருமணத்தினை நிச்சயிக்கின்றனர். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் ஹிந்தி கற்றுக்கொள்ள விரும்புகிறார். ஏன், எதற்கு? என்பது தான் ரகு தாத்தாவின் கதை.
‘கயல்விழி பாண்டியன்’ என்கிற துடுக்குத்தனமான கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நன்றாகவே நடித்திருக்கிறார். திரைப்படத்தின் முழுக்கதையும் அவரை சுற்றியே நடக்கிறது. தேவதர்ஷினியுடன் இணைந்து கொண்டு சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.
கீர்த்தி சுரேஷின் காதலனாக, தமிழ்செல்வன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரவீந்தர விஜய், கதாபாத்திரத்தினை உணர்ந்து நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸில் மாட்டிக்கொண்டு முழிக்கும் காட்சி சிறப்பு!
கீர்த்தி சுரேஷின் தாத்தாவாக வரும் எம். எஸ். பாஸ்கர், இயல்பாக நடித்து மனம் கவருகிறார்.
கதையில் டிவிஸ்ட்டுகளுக்கு இடமிருந்தும் அதை திரைக்கதையில் சரியாக கையாள முடியாதது படத்தினை ரசிக்கமுடியவில்லை! படம் முழுவதும் விரவிக்கிடக்கும் நாடகத்தன்மையினை தவிர்த்திருக்கலாம்.
கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ‘கயல்விழி பாண்டியன்’ கதாபாத்திரம், மிகைப்படுத்தப்பட்டு, சில இடங்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. குறிப்பாக அவரது அப்பாவுடனான கட்சிகளை கூறலாம்.
திணிக்கப்படும் இந்தி மற்றும் ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடும் ஒரு துணிச்சலான பெண்ணின் கதையை காமெடியாக சொல்ல முயற்சித்து, தோற்றுப்போயிருக்கிறார், இயக்குநர் சுமன் குமார்.
ரகு தாத்தா – வெட்டி கூச்சல்!