சந்தானம், கீத்திகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலரது நடிப்பினி வெளிவந்துள்ள படம், ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’. எழுதி, இயக்கியிருக்கிறார், எஸ். பிரேம் ஆனந்த்.
சந்தானம் திரைப்படங்களை விமர்சனம் செய்யும் ஒரு யூடியுபர். ஒரு நாள், சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது. அவருடன் குடும்பத்தினரும் அதில் கலந்து கொள்கின்றனர். படம் திரையிட்ட சில நேரம் கழித்து , திரையிடப்பட்ட படத்தின் கதாபாத்திரங்களாக திரைக்குள் சிக்கிக்கொள்கின்றனர். சைக்கோ த்ரில்லர் படமான அதில், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. அதிலிருந்து தப்பித்தால் மட்டுமே அவர்கள் உயிருடன் வெளியே வரமுடியும். என நிபந்தனை விதிக்கப்படுகிறது. இதன் பிறகு சந்தானமும் அவரது குடும்பத்தினரும் என்ன ஆனார்கள்? என்பது தான், ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் கதை.
முழுக்க, முழுக்க வித்தியாசமான வேறுபட்ட ஒரு சந்தானத்தை இந்தப்படத்தில் காணமுடிகிறது. நடை, உடை, பாவனை என அனைத்திலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். அதை ரசிக்கவும் முடிகிறது. தனது வழக்கமான காமெடிக் குழுவினருடன், கலகலப்பூட்டி சிரிக்க வைக்கிறார், சந்தானம்.
நாயகியாக நடித்திருக்கும் கீதிகா திவாரி, பெயரளவிற்கு நாயகியாக நடித்திருக்கிறார். அவர் நடிப்பதற்கும் பெரிதாக காட்சிகள் எதுவும் இல்லை.
கெளதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், நான் கடவுள் ராஜேந்திரன், மாறன், ரெடின் கிங்ஸ்லி என அனைவரும் ரசிக்கும்படி நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஆப்ரோ இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே!
ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவில் குறையில்லை.
படத்தொகுப்பாளர் பரத் விக்ரமனின், படத்தொகுப்பு நேர்த்தி!
புரிதலின்றி விமர்சனம் செய்யும் விமர்சகர்களை குறிவைத்து கலகலப்பான ஒரு படத்தை கொடுத்துள்ளார். எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த். முதல் பாதியில், பார்வையாளர்களை சிரிக்க வைத்து, இரண்டாம் பாதியில் திகிலுடன் பயணிக்க வைத்து, சிரிக்க வைக்கிறார்.
’டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ – சிரிக்கலாம்.