‘தில் ராஜா’ –  விமர்சனம்!

தமிழில் மகாபிரபு, செல்வா, நிலாவே வா, சாக்லெட் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்கியிருக்கும் திரைப்படம், தில் ராஜா. முதலில் இந்த திரைப்படத்திற்கு ரஜினி என பெயர் வைக்கப்பட்டிருந்தது. வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தயாரித்திருக்கிறார்.

நாயகன் விஜய் சத்யா, நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். இவர் தனது குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடி விட்டு மனைவி ஷெரினுடன் வீடு திரும்பிக்கொண்டிருக்கிறார். அப்போது அமைச்சரின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் ஷெரினை பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறார்கள். அங்கு நடக்கும் சண்டையில் அமைச்சர் மகன் கொல்லப்படுகிறார். இதன் காரணமாக போலீஸ் ஒரு பக்கமும், அமைச்சரின் அடியாட்கள் ஒரு புறமும் துரத்துகிறார்கள். இதிலிருந்து விஜய் சத்யாவும் அவரது குடும்பமும் தபித்ததா, இல்லையா? என்பது தான் தில் ராஜா படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் விஜய் சத்யா, தோற்றத்தில் ஜெயம் ரவியை நினைவு படுத்துகிறார். கட்டுமஸ்தான உடலுடன், ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அனைத்து தகுதிகளையும் உடையவராக தன்னை நிலைநிறுத்துகிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டும் அவர், உணர்ச்சி கரமான காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார்.

விஜய் சத்யாவின் மனைவியாக நடித்திருக்கும் ஷெரின். ஓகே

அமைச்சர் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஏ.வெங்கடேஷ் மிரட்டியிருக்கிறார்.

அமைச்சர் மகனைத்தேடி வரும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சம்யுக்தா. கவர்ச்சியால் கவர்ந்திழுக்கிறார்.

விஜய் டிவி KPY பாலாவின் வழக்கமான பஞ்ச் சில சிரிக்க வைக்கிறது.

மற்றபடி கு.ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர்,  வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் உள்ளிட்டோர் பரவாயில்லாத நடிப்பு.

ஒளிப்பதிவாளர் மனோ வி.நாராயணா ஆக்‌ஷன் காட்சிகளை பாராட்டும்படி படமாக்கியிருக்கிறார்.

அம்ரீஷ் இசையில், பின்னணி இசை திரைக்கதைக்கு உதவியிருக்கிறது.

இயக்குநர் ஏ.வெங்கடேஷ், தனது வழக்கமான  கமர்ஷியல் ஃபார்மூலாவுடன் திரைக்கதையை அமைத்திருந்தாலும், போதிய சுவாரசியம் இல்லாதது படத்தின் பலவீனம்.

‘தில் ராஜா’ –  ராஜ்யமில்லாத ராஜா.