“காலா” திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் பா.இரஞ்சித் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். “நமா பிக்சர்ஸ்” மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் இத்திரைப்படம், ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக வீரச் சமர் புரிந்த பழங்குடியின போராட்டக்காரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருக்கிறது.
கடந்த மே மாதம் தயாரிப்பு நிறுவனத்துடன் இப்படத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டு, முதற்கட்ட பணிகளை ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். இதற்காக வட மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் கிராமங்களுக்குச் சென்று தீவிரமாக தகவல்களை சேகரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்க இருக்கிறது.
பிர்சா முண்டா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முன்னணி நடிகருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இப்படத்திற்கு பாலிவுட் உலகில் இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
“நமா பிக்சர்ஸ்” ஏற்கனவே தயாரித்த “பியாண்ட் த க்ளவுட்ஸ்” திரைப்படம் உலக அளவில் பாராட்டுகளை குவித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.