உள்ளாட்சியில் வென்று, நல்லாட்சி தொடர்வோம்! – மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்காக பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றனர். இந்நிலையில் திமுக கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது…

உள்ளாட்சியில் வென்று, நல்லாட்சி தொடர்வோம்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

உள்ளாட்சி என்பது மக்களாட்சியான ஜனநாயகத்தின் ஆணிவேர். அது வலிவுடனும் பொலிவுடனும் இருந்தால்தான், அரசின் நலத்திட்டங்கள் நாளும் தழைத்து – நன்குசெழித்து, கடைசிப் பகுதியில் உள்ள குடிமக்கள் வரை, அவரவர்க்கான உரிமைகளையும் உற்ற நலன்களையும் பெறமுடியும். திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதுமே உள்ளாட்சிகளை, உரு சிதையா வண்ணம், உயர்த்தி வலிமைப்படுத்துவதில் தனிக் கவனம் செலுத்தக்கூடிய இயக்கமாகும். ஆட்சி செய்கின்ற வாய்ப்பு அமையும்போதெல்லாம், உள்ளாட்சி அமைப்புகள் செழித்து வளர்ந்திட முறையாக நீர் வார்ப்பது கழகத்தின் இயல்பு.

தமிழ்நாடு இப்போது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது. அதில் உறுதியான வெற்றி வியூகங்களுடன் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் களத்தில் கருத்தொன்றிப் பணியாற்ற ஆர்வமுடன் ஆயத்தமாகியிருப்பீர்கள். பிப்ரவரி 19-ஆம் நாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 21 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல் களத்தில் கழகம் எப்படிப் பணியாற்றிட வேண்டும் என்பதற்காக கடந்த 27-ஆம் நாளன்று மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினோம்.

அந்தக் காணொலி கூட்டத்தில் ஏறத்தாழ 50 மாவட்டக் கழகச் செயலாளர்கள் தங்களுடைய ஆழ்ந்த கருத்துகளைத் தெரிவிப்பதற்கும், அவர்களிடம் உங்களில் ஒருவனான நான் உளம் கலந்து உரையாடுவதற்கும் நல்வாய்ப்பு அமைந்தது. காணொலிக் கூட்டத்திற்குப் பிறகும்கூட, கடந்த இரண்டு-மூன்று நாட்களாக, கழகத்தின் மாவட்டச் செயலாளர்களைத் தொடர்ச்சியாகத் தொடர்புகொண்டு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆற்ற வேண்டிய அனைத்துப் பணிகள் குறித்தும் ஆலோசனைகள் நடத்தி வருகிறேன். மிகுந்த ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் ஒவ்வொருவரும் களப்பணியில் ஈடுபாடு கொண்டு இருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. அந்த ஊக்கம், தேர்தல் நடைபெறும் அனைத்து இடங்களிலும் பரவலாகவும் பாங்காகவும் சீராகவும் சிறப்பாகவும் அமைந்திட வேண்டும் என்பதே உங்களில் ஒருவனான என் விருப்பம் – வேண்டுகோள் – அன்புக் கட்டளை.

கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது, தோழமைக் கட்சிகளுக்கான இடங்களைப் பகிர்ந்தளிப்பது, வாக்கு சேகரிப்பில் அனைவருடனும் ஒருங்கிணைந்து ஒரே நோக்கோடு செயல்படுவது என, ஒவ்வொரு கட்டத்திலும் கழக நிர்வாகிகள் கடமை உணர்வுடனும், மிகுந்த பொறுப்புடனும் செயலாற்றிட வேண்டும்.

தோழமைக் கட்சித் தலைவர்கள் பலர் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து, கழகத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் தேர்தல் பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசனை நடத்தியுள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஆட்சியின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு அருகிருந்து துணை நிற்கும் வகையில் அவர்கள் நன்னம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். மாவட்ட – ஒன்றிய – நகர அளவில் உள்ள கழக நிர்வாகிகள், அவரவர்தம் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் தோழமைக் கட்சியினருக்கு உரிய அளவிலான இடங்களை மனமுவந்து ஒதுக்கீடு செய்வதில் சுணக்கமின்றிச் செயல்பட வேண்டும். கூட்டணிக் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு நெருடல் ஏற்படாத வகையில் கழகத்தினரின் அணுகுமுறை அவசியம் அமையவேண்டும் என்பதும், வெறும் தேர்தல் கூட்டணியாக இல்லாமல், கொள்கைக் கூட்டணியாக உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தூய தோழமை தொடர்ந்திட வேண்டும் என்பதும் உங்களில் ஒருவனான என் வேண்டுகோளாகும்.

கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்தபிறகு, தி.மு.கழகம் போட்டியிட உள்ள இடங்களுக்கான கழக வேட்பாளர்கள் தேர்வு என்பது, இராணுவ வீரர்களைத் தேர்வு செய்வது போன்ற நெறிமுறைகளுடன் கண்டிப்பானதாகவும் கட்டுக்கோப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதைக் கழகத் தலைவர் என்ற முறையில் அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன். உள்ளாட்சித் தேர்தல் களத்தில் மக்கள் வழங்கவிருக்கும் வாக்குகளால் வெற்றி பெறக்கூடிய வார்டு உறுப்பினர்கள், மறைமுகத் தேர்தலில் தேர்வு செய்யப்படவிருக்கும் மேயர்கள் – சேர்மன்கள் உள்ளிட்டோர்தான் மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்களை உரிய முறையில் ஒழுங்கு படுத்திக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய இடத்திலே இருக்கிறார்கள்.

கடந்த 8 மாதங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ள அருமையான திட்டங்கள் இந்திய அளவில் அனைவருடைய கவனத்தையும் கனிவான பாராட்டுகளையும் பெற்று வருகின்றன. அவை, உள்ளாட்சியின் அனைத்து நிலைகளிலும் முழுமையாகச் செயல்படுத்தப்படும்போதுதான் ‘அனைவர்க்கும் அனைத்தும்’ என்கிற நமது அரசு சார்ந்த திட்டங்களின் அற்புத நோக்கம் முழுமை பெறும். அத்தகைய செயலாற்றல் கொண்டவர்களே கழகத்தின் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட வேண்டும். சுயநலம் தவிர்த்து, பொதுநலச் சிந்தனையும் கொள்கைப் பற்றும் கொண்டு, இயக்கத்தின் வளர்ச்சிக்குத் தன்னை முழுமையாகவும் முழுநேரமும் அர்ப்பணித்துக் கொண்ட கழகத்தினருக்கு வேட்பாளர் தேர்வுகளில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். குற்றப் பின்னணி ஏதேனும் இருந்தால், அவை தொடர்பான வழக்குகளில் தன்னை நிரபராதி என்று சட்டப்பூர்வமாக நிரூபிக்கும் வரையில் அவர்களை வேட்பாளராகத் தேர்வு செய்திடல் நிச்சயமாகக் கூடாது என்பதை கழக நிர்வாகிகள் தவறாமல் மனதில் கொள்ள வேண்டும்.

நம் உயிர்நிகர்த் தலைவரான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது, 1996-இல் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளாட்சித் தேர்தல் சிறப்பான முறையில் நடைபெற்றது. தற்போது மகளிருக்கு 50% இடஒதுக்கீட்டுடன் முதன்முறையாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. மகளிரணி, மகளிர் தொண்டர் அணி, தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், இளைஞரணி, மாணவரணி, இலக்கிய அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவர் அணி, தகவல்தொழில்நுட்ப அணி உள்ளிட்ட கழகத்தின் பல்வேறு அணிகளில் திறம்பட செயலாற்றக்கூடிய மகளிர் இருக்கிறார்கள். போராட்டக் களங்களைப் புன்னகையுடன் எதிர்கொண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மக்களிடம் நற்பெயரும் செல்வாக்கும் பெற்றுள்ளனர். 50 விழுக்காடு மகளிருக்கான இடஒதுக்கீட்டில், இத்தகையோர்க்கு முன்னுரிமை அளித்திட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் நடுநிலையுடன் மிகுந்த கவனம் செலுத்தி, வெற்றி வேட்பாளர்களைத் தேர்வு செய்தபிறகு, அந்த வேட்பாளரின் வெற்றிக்கு, கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு வழங்கி, ஓய்வின்றி, பயனுள்ள வகையில், பணியாற்ற வேண்டும். சொந்த விருப்பு – வெறுப்புகள் சிறிதளவும் தலையெடுக்க அனுமதிக்கவே கூடாது. கழக வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களைப் போலவே தோழமைக் கட்சியினர் போட்டியிடும் இடங்களிலும் முழுமையான ஒருங்கிணைப்பும், உணர்வுப்பூர்வமான ஒத்துழைப்பும் களப்பணியும் அமைதல் வேண்டும்.

ஒவ்வொரு வார்டிலும் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் சந்திக்கும் வகையில், தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு சென்று வாக்கு சேகரிப்புப் பணியை விரைவுபடுத்துங்கள். கொரோனா பரவலை மனதில்கொண்டு, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கட்டுப்பாடு நெறிமுறைகளைப் பின்பற்றி, கழக உடன்பிறப்புகள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்திட வேண்டும்.
கடந்த 8 மாதங்களில் நமது அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள், அதனால் மக்களுக்குக் கிடைத்துள்ள நன்மைகள், மகளிர் பெற்றுள்ள உரிமைகள் – சலுகைகள், மாணவர்கள், உழவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரின் நலனுக்காகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், கொரோனா இரண்டாவது பேரலையைத் திறம்படக் கையாண்டு – மூன்றாவது அலையில் பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுமக்களை அரணாக நின்று காத்த நமது அரசு, கடும் நிதி நெருக்கடியிலும் நிறைவேற்றி வரும் சாதனைகளை மக்களிடம் சரியாக எடுத்துச் சொல்லி வாக்கு சேகரியுங்கள். தேர்தல் அறிக்கையில், ஐந்தாண்டுகளில் நிறைவேற்ற, வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் படிப்படியாக முறையாக நிறைவேற்றப்படும் என்பதை எடுத்துச் சொல்லுங்கள். அந்தந்தப் பகுதியிலும் உள்ள மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளையும் கட்டாயம் கவனத்தில் கொள்ளுங்கள். “இது உங்களுக்கான அரசு” என்பதை மக்களிடம் விளக்கித் தெரிவித்து, நம்பிக்கையைப் பெற்றிடுங்கள்.

நல்லாட்சியின் நற்பெயரை எப்படியாவது சிதைத்திட, குறைத்திட வேண்டும் என்ற கெடுசிந்தனையுடன் நாளுக்கு நாள் பொய்யை மட்டுமே சொல்லி வரும் அ.தி.மு.க. தலைமையினால், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு பட்ட பாட்டை நினைவுபடுத்துங்கள். தற்போதுதான் வெளிச்சம் பரவிடத் தொடங்கியுள்ளது என்பதை எடுத்துக் கூறுங்கள்.
அமைதியான சூழலும் – நல்லிணக்கமான வாழ்க்கையும் கொண்ட தமிழ்நாட்டு மக்களின் மனதில் மதவெறியை விதைத்து, கலவரத்தைத் தூண்டிவிட்டு, அதில் அரசியல் குளிர்காய அவசரம் காட்டும் பா.ஜ.க.வின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள். மக்கள் நலனுக்கு எதிரான இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டைப் பாழ்ப்படுத்த நினைப்பதை எடுத்துக் கூறுங்கள். மதவாத அரசியலுக்கு ஒருபோதும் இடமளிக்காத தமிழ்நாட்டு மக்களின் தனித்தன்மையை நினைவுபடுத்துங்கள்.

சமூகநீதி, சுயமரியாதை, சாதி வேறுபாடற்ற மதநல்லிணக்கம், ஒருங்கிணைந்த வளர்ச்சி இவற்றை அடிப்படையாகக் கொண்ட ‘திராவிட மாடல்’ அரசாக விளங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திட்டங்களும், செயல்பாடுகளுமே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் நமக்கான நற்சான்றுக் கருவிகள். நல்லாட்சியின் விளைச்சலை, உள்ளாட்சியில் முழு வெற்றியாக அறுவடை செய்திட, ஊக்கத்துடன் அயராது பாடுபடுங்கள்.

அ.தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்தபோது நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலேயே அவர்களின் அனைத்து தில்லுமுல்லுகளையும் மீறி, திராவிட முன்னேற்றக் கழகம்தான் பெரும் வெற்றி பெற்றது. நம்முடைய ஆட்சி அமைந்தபிறகு நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் மகத்தான வெற்றி பெற்றோம். அன்றும் இன்றும் மக்கள் நம் மீதே மாறா நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அது என்றென்றும் தொடரும் வகையில் களப்பணியாற்றுங்கள். நகர்ப்புற உள்ளாட்சியில், நாடே போற்றிடும் வகையில் வெல்வோம்; நல்லாட்சியை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்வோம்!

அன்புடன்,
மு.க.ஸ்டாலின்,

இவ்வாறு அந்தக்கடிதத்தில் கூறியிருக்கிறார்.