ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ,அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும்’ டி என் ஏ’ ( DNA) திரைப்படத்தின், இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா, சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ஜூன் மாதம் 20 ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும், இப்படத்தில் அதர்வாவுடன், நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா ,சுப்பிரமணியம் சிவா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ காந்த் ஹரிஹரன், சகி சிவா, பிரவீண் சைவி, சத்ய பிரகாஷ் அனல் ஆகாஷ் ஆகியோர் பாடல்களுக்கும், ஜிப்ரான் வைபோதா படத்திற்கு பின்னணி இசையும் அமைத்திருக்கிறார்கள். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் அம்பேத்குமார் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
நடிகை நிமிஷா சஜயன் பேசுகையில்,
‘ டி என் ஏ எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. திவ்யா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சிறிது சவாலானதாக இருந்தது. அதர்வா திறமையான சக நடிகர். ரசிகர்கள் பார்த்து வியக்கும் அளவிற்கு திரையில் மாயஜாலம் செய்திருக்கிறார். படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படம் ஜூன் இருபதாம் தேதி அன்று வெளியாகிறது . அனைவரும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார் .
நடிகர் அதர்வா பேசுகையில்,
” இந்த விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி குறிப்பாக கவின்மொழி மற்றும் நிலா பாரதி ஆகிய இருவரும் வருகை தந்தது எங்களுக்கு பெருமை. கடந்த தசாப்தத்தில் வெளியான சிறந்த படங்களில் பரியேறும் பெருமாள் ஒன்று. இந்த படத்தின் வாய்ப்பை தவறவிட்டதால் எதையும் இழக்கவில்லை என நினைக்கிறேன். ஏனெனில் கதிர் மிக அற்புதமாக நடித்திருந்தார். மாரி செல்வராஜ் வேறு ஏதேனும் கதை இருந்தால்.. அதில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
டி என் ஏ படத்தின் கதையை இயக்குநர் நெல்சன் சொல்வதற்கு முன் தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார் ஃபோனில் சொல்லிவிட்டார். ஆனால் அப்போது படத்தின் டைட்டில் என்ன? என்று கேட்கவில்லை. இயக்குநர் நெல்சன்.. அவர் இயக்கிய படங்களில் எமோஷனலை நிறுத்தி நிதானமாக சொல்லி இருப்பார். அதனால் அவர் என்ன கதை சொல்லப் போகிறார் என்பதை கேட்க ஆவலாக இருந்தேன்.
கதையை சொல்ல தொடங்கும் போது இந்த படத்தின் டைட்டில் டி என் ஏ என்றார். உடனே டி என் ஏ என்றால் ஜெனிடிக் தொடர்பான சயின்டிபிக் பிக்ஷன் கதையாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் அவர் டி என் ஏ என்றால் திவ்யா அண்ட் ஆனந்த் என சொன்னார். திவ்யா கதாபாத்திரத்தில் நிமிஷா நடித்திருந்தார். ஆனந்த் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன்.
ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போது ஒரு அனுபவம் கிடைக்கும். இந்த படத்தில் நடிக்கும் போது எதையும் நினைக்காமல் திறந்த மனதுடன் சென்றேன். படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளை மேம்படுத்தினார்கள். எனக்குத் தெரிந்து இந்த படத்தில் நானும், நிமிஷாவும் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தோம். அந்த காட்சி 15 வினாடிகள் தான் இருக்கும். 15 வினாடிகளில் அந்த காட்சிக்கான உரையாடல்கள் நிறைவடைந்து இருக்கும். அதன் பிறகும் நிமிஷா நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்கள். அதற்கு இணையாக நானும் நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தேன். இது 40 விநாடிகள் வரை நீடித்தது. அதன் பிறகு அந்தக் காட்சியை நாங்கள் பார்க்கும் போது அழகாக இருந்தது. நெல்சன் அந்த காட்சியை அப்படியே படத்தில் வைத்திருக்கிறார். அது முன்னோட்டத்திலும் இடம்பிடித்து இருக்கிறது. இரண்டு பேரும் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டிருக்கும் காட்சி அது. சில படங்களில் தான் இது போன்று அமையும்.
இந்தப் படத்தின் இசை யாரென்று இயக்குநரிடம் கேட்டேன். அதற்கு நான் பண்பலை வானொலியில் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. அதனால் ஐந்து புதிய திறமையான இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறேன் என்றார்.
இந்தப் படத்தின் கதையை கேட்ட பிறகு உடனடியாக ஏனைய நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டனர். இரண்டே மாதத்தில் படப்பிடிப்பு பணிகளை தொடங்கி விட்டோம். இதற்கு தயாரிப்பாளரும் முக்கியமான காரணம். சினிமா மீது அவருக்குள்ள காதலால் இது சாத்தியமானது. கதையை அனைவரும் எளிதாக எழுதலாம். ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எழுதுவது கடினமானது. இதற்கு நிறைய யோசிக்க வேண்டும். எல்லா கதாபாத்திரத்தையும் சிறப்பாக இயக்குநர் நெல்சன் எழுதி இருந்தார். படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்களுக்கு எந்தவித குழப்பமும் இருக்காது.
பொதுவாக ஒரு படம் வெளியாகும் போது அதில் பணியாற்றிய கலைஞர்களுக்கு பயம் கலந்த பதட்டம் இருக்கும். ஆனால் இந்த படத்தில் எங்களுக்கு பயம் இல்லை. பதட்டமும் இல்லை .சிறிய அளவில் நம்பிக்கை இருக்கிறது . நல்ல படம் எடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. பொதுவாக நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். நண்பர் மீது வைக்கும் நம்பிக்கை… ஒரு காதலன் காதலி மீது வைக்கும் நம்பிக்கை… இந்த படத்தை பொறுத்தவரை மனைவி என்பவர் தன் கணவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை.. அந்த நம்பிக்கையினால் எந்த அளவிற்கு தங்களின் அன்பை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதைத்தான் இப்படம் சொல்கிறது. அதனால் ரசிகர்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என்று நம்புகிறேன். ” என்றார்.
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசுகையில்,
” இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அம்பேத்குமார் சிறந்த மனிதர் என்று சொல்வதை விட சிறந்த மக்கள் பிரதிநிதி என்று தான் சொல்ல வேண்டும். தினமும் சென்னையிலிருந்து அவருடைய தொகுதியான வந்தவாசிக்கு சென்று மக்களை சந்தித்து விட்டு அதன் பிறகு தான் சென்னை திரும்புவார். அவரை நான் சில முறை வந்தவாசிக்கு சென்று சந்தித்திருக்கிறேன். தொகுதியுடன் நெருக்கமாக இருக்கும் மக்கள் பிரதிநிதியை சந்தித்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.படத்தின் கதையை நான் அவரிடம் சொன்ன பிறகு, அவர்தான் எல்லோரிடமும் சொன்னார். அந்த வகையில் இந்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு அளித்ததற்காக அவருக்கு நன்றி.
‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்க’ என்ற படத்திற்காக ஏற்கனவே ஐந்து இசையை பாடல்கள் பணியாற்றி இருக்கிறார்கள். இந்த படத்தில் ஐந்து இசையமைப்பாளர்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். ஐந்து பேரிடமும் பணியாற்றும்போது ஐந்து வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. இந்தப் படத்திற்கு வலிமையாகவும் உறுதியாகவும் ஒரு பின்னணி இசை தேவைப்பட்டது. அதற்காக ஜிப்ரானினை தொடர்பு கொண்டோம். அவருடைய எல்லா பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியதற்காக அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறப்பு விருந்தினராக வருகை தந்த இயக்குநர் மாரி செல்வராஜுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 2016 ஆம் ஆண்டில் என்னை தொடர்பு கொண்டு ஒரு நாள் கூத்து படத்தை பற்றி பாராட்டி பேசினார். அவர் ஒரு மேடையில் பேசிய பேச்சுதான் என்னை ஃபர்கானா படத்தை இயக்குவதற்கான தூண்டுதலாக அமைந்தது. மாரி செல்வராஜ் இன்று அடைந்திருக்கும் உயரம் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதர்வாவும், நிமிஷாவும் இல்லையென்றால் இந்த படம் இல்லை. ஏன்? என்பது இந்தப் படத்தை நீங்கள் திரையில் பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள்.
இது ஒரு கிரைம் ஆக்சன் டிராமா. இந்தப் படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும் அற்புதமாக இருக்கிறது. என்னுடைய முந்தைய மூன்று படங்களுக்கு மாறுபட்டதாகவும், ஒரு இயக்குநராக எந்த சமரசமும் செய்து கொள்ளாத படைப்பாகவும் டி என் ஏ இருக்கும். இது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் , நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார் .