‘டாக்டர்’ : விமர்சனம்.

‘கோலமாவு கோகிலா’ படத்திற்கு பிறகு நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கியுள்ள படம்  ‘டாக்டர்’.  சிவகார்த்திகேயனின் ‘ Sivakarthikeyan Productions’ உடன் இணைந்து, ‘ KJR Studios’ சார்பில் கோட்டபாடி  J ராஜேஷ் தயாரித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்து தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். இவர்களுடன் இளவரசு, அர்ச்சனா, யோகிபாபு, ரெடின் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘உன்னாலே உன்னாலே’ படத்தின் கதாநாயகன்  வினய் ராய் வில்லனாக நடித்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியிருக்கும் ‘டாக்டர்’ எப்படி இருக்கிறது?

நயன்தாரா நடித்திருந்த ‘கோலமாவு கோகிலா’ படத்தினை போலவே ‘டாக்டர்’ படமும் ‘பிளாக் காமெடி’ ஜானரில் உருவாகியுள்ளது. அந்தப்படத்தில் போதை மருந்து கடத்தல். இந்தப்படத்தில் குழந்தைகள் கடத்தல் அவ்வளவு தான்.

மிலிட்டரி டாக்டர் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன்  இருவருக்கும் கல்யாண பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், சிவகார்த்திகேயனை ப்ரியங்கா பிடிக்கவில்லை என்கிறார். ஆனாலும் சிவகார்த்திகேயன் அவரது வீட்டின் முன்பே தவமிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், ப்ரியங்காவின் அண்ணன் மகள் (சிறுமி) காணாமல் போகிறார். அதை தேடி களமிறங்கும் ‘டாக்டர்’ சிவகார்த்திகேயன் & கோ அந்த சிறுமியை தேடிப்பிடித்தார்களா, இல்லையா? என்பது தான் படத்தின் நீ….ளமான திரைக்கதையும், அடப்போங்கப்பா… இதற்கா இத்தனை ஆர்ப்பாட்டம்.. என்ற க்ளைமாக்ஸூம்!

வழக்கமான கல..கல.. சிவகார்த்திகேயன் மிஸ்ஸிங். படம் முழுவதும் உர்றுன்னு வர்றாரு. கதாபாத்திர சித்தரிப்பான்னு கேட்டா, அது இல்ல. ஆனால் ஷாக் அடிச்ச ‘ரோபோ’ மாதிரி தான் டயலாக் பேசுகிறார். இவரைப்போல் பல நடிகர்கள் உர்றுன்னு தான் இருக்கிறார்கள். அதனால் ஒரு செயற்கையான தோற்றம் பல இடங்களில்.

இளவரசு, அர்ச்சனா, வினய்ராய் உள்ளிட்ட ஒரு சில கதாபாத்திரங்கள் மட்டுமே சரியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. நன்றாகவும் நடித்துள்ளனர். அர்ச்சனாவுக்கு அவரது மகள் சாப்பாடு பரிமாறும் போது பீறிட்டு வரும் அழுகையின் நடுவே தாய்ப்பாசம் காட்டும் அர்ச்சனாவின் நடிப்பு சிறப்பு!

நடிகர்கள் ரெடின், யோகிபாபு இருவர் மட்டுமே மொத்த படத்தையும் காப்பாற்றியிருக்கிறார்கள். அதிலும் ‘ரெடின்’ சூப்பர் தலைவா… படத்தினை போரடிக்கவிடாமல் அவ்வப்போது வந்து படம் பார்ப்பவர்களையும், சிவகார்த்திகேயனையும் காப்பாற்றுகிறீர்கள். பாராட்டுக்கள்!!!

ஓவராக்ட்டிங் தீபா, ஒஹோ.. ஆக்டிங். அவருக்கும் பாராட்டுக்கள்.

அனிருத், இசை அமைத்திருக்கிறார்?

டைரக்‌ஷன் இன்டெலிஜென்ட், ஷாட் பியூட்டி, லாஜிக் என எதையுமே எதிர்பார்க்காமல் பார்க்கலாம் ரெடின் நிச்சயமா ஏமாற்றமாட்டார்.

அந்த மாதிரி ‘க்ளைமாக்ஸ்’ வைக்கிறதுக்கு தனி தில்லு தான் வேணும்! நெல்சன் திலிப்குமாருக்கு தைரியம் நிறைய! ( வெயிட்டிங் ஃபார் பீஸ்ட் தலைவா! படத்தை என்ன பண்ணி வச்சிருக்காரோ? ) பிளாக் காமெடின்னாலும் ஒரு நியாயம் வேணாமா சார்.