‘டபுள் டக்கர்’ – விமர்சனம்!

Air Flick Production நிறுவனம் தயாரித்து, அறிமுக இயக்குநர் மீரா மஹதி இயக்கத்தில், வெளியாகியிருக்கும் படம், டபுள் டக்கர். தீரஜ், ஸ்ம்ருதி வெங்கட் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்க, இவர்களுடன், மன்சூர் அலிகான், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன்,முனிஷ்காந்த், சுனில் ரெட்டி, ஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எமதர்மன், சித்ரகுப்தன், கிங்கரர்கள். இவர்களுக்கும் ஒரு மனிதனுக்கும் இடையே நடக்கும் ஒரு சர்ச்சையே டபுள் டக்கர்.

மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை, அவர்கள் செய்யும் நன்மை, தீமைகளை கணக்கெடுப்பவர்கள், லெஃப்ட் மற்றும் ரைட். இந்த கணக்குகளை தங்களுடைய தலைவருக்கு கொடுப்பதோடு, மனிதரின் ஆயுள் காலத்தினை கணக்கிட்டு அவர்களின் உயிரையும் தங்களது தலைவரிடம் எடுத்துச் செல்கின்றனர்.

லெஃப்ட் மற்றும் ரைட் இருவரும், இப்படியான சூழலில், நாயகன்  தீரஜின் ஆயுள் முடிவதற்குள் அவரது உயிரை பறித்து விடுகிறார்கள். பின்னர், இந்த விஷயத்தினை புரிந்து கொண்ட இருவரும், தீரஜின் உடலுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முயற்சிக்கும் போது, அவரது உடல் காணாமல் போகிறது. அதன் பின்னர் தீரஜின் உடலைத் தேடி அலைகின்றனர். இதன் பின்னர்< என்ன நடந்தது? என்பது தான், டபுள் டக்கர் படத்தின் நகைச் சுவையான திரைக்கதை.

தமிழில் இதைப்போல் பல படங்கள் வந்துள்ளன. ஆனால், டபுள் டக்கர் படத்தில், அனிமேஷனுடன், சற்றே மார்டனான திரைக்கதையின் மூலம், லாஜிக் தவிர்த்து, சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்.

நாயகன் தீரஜ், தனது கதாபாத்திரம் உணர்ந்து, குறை சொல்ல முடியாத அளவிற்கு நடித்திருக்கிறார். காமெடிக் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஸ்ம்ருதி வெங்கட், கதாநாயகியாக அவ்வப்போது தலைகாட்டுகிறார்.

கருணாகரன் மற்றும் யாஷிகா ஆனந்த் ஒரு பக்கம், சுனில் ரெட்டி மற்றும் ஷாரா மறுபக்கம். இவர்களில் ஷாராவைத்தவிர அனைவரும் சிரிக்க வைக்கிறார்கள். இதில் சுனில் ரெட்டி சூப்பர். மேலும், மன்சூர் அலிகான் மற்றும் கோவை சரளா இடையே நடக்கும் டெலிபோன் காமெடி, சிரிப்போ… சிரிப்பு! இந்த நகைச்சுவைக் காட்சிகளை இன்னும் மேம்படுத்தியிருக்கலாம். பல காட்சிகளில், சிரிப்புக்கு பதில் வெறுப்பு ஏற்படுத்துகின்றனர்.

லெஃப்ட் மற்றும் ரைட் என்ற அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருக்கும் காளிவெங்கட் மற்றும் முனீஷ்காந்த், இடைவேளைக்குப் பிறகு தோன்றி சிரிக்க வைக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு ஓகே! வித்யா சாகரின்  பின்னணி இசை, காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.

டபுள் டக்கர் படத்தினை எழுதி, இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் மீரா மஹதி, தன்னால் முடிந்த அளவிற்கு சிறுவர்களை சிரிக்க வைத்துள்ளார்.

‘டபுள் டக்கர்’ படத்தினை சிறுவர்கள் கொண்டாடலாம்!