ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொள்ளுங்கள், அரசியலுக்கு வருவேன்! – நடிகர் விஜய் ஆண்டனி!

‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்’ தயாரித்து, விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில், வரும் 11  ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம், ரோமியோ. இதில், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி இவர்களுடன், விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

‘ரோமியோ’ ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தினை, ‘கணவன், மனைவி குடும்பத்துடன் வந்து பார்க்க வேண்டும். முக்கியமாக மனைவிகள் பார்க்க வேண்டிய படம். ‘  என்று கூறிய ‘ரோமியோ’ படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி, கோவை செய்தியாளர்களிடம் கூறியதாவது..

ரோமியோ திரைப்படம், காதலிக்கும் போதும்,திருமணத்திற்குப் பிறகு கணவன் – மனைவி இடையே காதல் எப்படி இருக்க வேண்டும். என்பது குறித்து இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. முதலிரவு காட்சியில், மது அருந்துவது போன்ற காட்சி, மிகச் சிறிய காட்சி தான். இதில் மது குடிக்கத்தூண்டுவது போல் காட்சி அமைக்கப்படவில்லை. பெண்கள் என்றுமே ஆண்களுக்கு மேலானவர்கள். சூட்டிங்கில் ஏற்பட்ட விபத்திற்கு பிறகு, மனதளவில் இன்னும் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன்.  ரசிகர்களிடையே, நல்ல படங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கிறது.

ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றமே. ஆனால், எளிய மக்கள் அவர்களின் வறுமையான சூழல் கருதி, பணம் வாங்கிக் கொள்ளலாம். அதன் பிறகு பணம் கொடுத்த கட்சிக்கு வாக்களிக்காமல், நல்லவர்களை பார்த்து வாக்களிக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய, சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப, அரசியலுக்கு வரும் சூழல் ஏற்பட்டால், அரசியலுக்கு நான் வருவேன் என்றார். நடிகர் விஜய் ஆண்டனி.