முன்னணி ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஸ்ரீகாந்த், தனது காதல் மனைவி பூஜா ஜாவேரியுடன் வாழ்ந்து வருகிறார். இரவு நேரங்களில் மனைவியுடன் தனியாக இருக்கும் சமயங்களில், ஒரு அமானுஷ்யமான சக்தி அவரை நிம்மதி இழக்கச் செய்கிறது. இதனால் ஏற்படும் பிரச்சனையில் மனைவி பூஜா ஜாவேரி அவரை விட்டு பிரிந்து செல்கிறார்.
ஶ்ரீகாந்த் தன்னுடைய பிரச்சனைக்கு தீர்வு காண, அமானுஷ்ய சக்திகளை எதிர்கொண்டு அதை வசப்படுத்தும், ஆசிஷ் வித்யார்த்தியின் உதவியை நாடுகிறார். ஸ்ரீகாந்தை ஆட்டிப்படைக்கும், அந்த அமானுஷ்ய சக்தி எது? அதை கட்டுப்படுத்த முடிந்ததா, இல்லையா? என்பதே ‘எக்கோ’ படத்தின் மீதிக்கதை.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்…, என்ற குறளின் பொருளுக்கேற்ப திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
அமானுஷ்யம், பேய் பயம் (பாஸ்மோபோபியா, Phasmophobia) கொண்ட ஒரு திகில் கதையை கொண்டு, முடிந்தவரை ரசிகர்களை மிரட்ட முயற்சித்துள்ளார், இயக்குநர் நவீன் கணேஷ். வழக்கமான பேய்க்கதைகளின் டெம்ப்ளேட்டில் இருந்து சற்றே மாறுபட்டு, ஒரு சில இடங்களில் மிரட்டியிருக்கிறார்.
வழக்கமான ஹீரோவாக இல்லாமல், மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஶ்ரீகாந்த் சிறப்பாக நடித்திருக்கிறார். ரசிக்கவும் முடிகிறது. அவருக்கு வித்யா பிரதீப், பூஜா ஜாவேரி என இரண்டு ஹீரோயின்கள். இருவருமே கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளனர்.
டிஜிட்டல் முறையில் பேய் ஓட்டும் நிபுணராக ஆசிஷ் வித்தியார்த்தி, சில காட்சிகள் வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
கோயில் பூசாரியாக காளி வெங்கட், பிரவீனா, ‘கும்கி’ அஷ்வின், ஸ்ரீநாத் என, சிறு சிறு கதாபாத்திரங்களில் எல்லோருமே நடித்திருக்கிறார்கள்.
கோபிநாத்தின் ஒளிப்பதிவு, நரேன் பாலகுமாரின் இசை ஓகே!
பேய்ப்பட ரசிகர்களுக்கு அதிகப்படியான மிரட்டல்கள், இல்லாமல் இருப்பது சற்று ஏமாற்றம்.
‘எக்கோ’ – வித்தியாசமான முயற்சி!