வசந்தபாலன் ரசிகர்களுக்கு செய்த, அநீதி – விமர்சனம்!

நாயகன் அர்ஜுன் தாஸ், ஃபுட் டெலிவரி ஆப் மார்க்கெட் நிறுவனத்தின் மூலமாக, உணவு விநியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார். வாடிக்கையாளர்கள் அவரிடம் நடந்து கொள்ளும் விதம், அவருக்கு கடுமையான மன உளைச்சலைத் தருகிறது. தன்னை சுற்றி இருப்பவர்கள் அர்ஜூன் தாஸை நடத்தும் விதத்தாலும், அவர் பாதிக்கப்படுகிறார்.

இந்நிலையில், துஷாரா விஜயனுக்கு உணவு விநியோகம் செய்யும் போது, அவரிடம் நட்பு ஏற்படுகிறது. அதுவே காதலாகவும் மாறுகிறது. இதனால், அர்ஜுன் தாஸின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டு சந்தோஷமான மன நிலைக்கு வருகிறார்.

அர்ஜூன் தாஸின், அந்த கொஞ்ச நாள் சந்தோஷத்திற்கு வேட்டு வைக்கும் மாதிரியான சூழ்நிலை ஏற்படுகிறது. அதாவது, துஷாரா விஜயன் வேலை செய்துவரும் வீட்டின் உரிமையாளர், பிரபல நடனக் கலைஞர் ‘சாந்தா தனஞ்ஜெயன்’ இறந்து விடுகிறார். அதை கொலையாக கருதி, அவரது மகள் வனிதா விஜய் குமார், துஷாரா விஜயன் மீதும் அவரது காதலன் அர்ஜூன் தாஸ் மீதும் போலீஸில் புகார் செய்கிறார். செய்யாத கொலைக்கு, அர்ஜூன் தாஸ் பழி ஏற்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது, என்பதே அநீதி!

வழக்கம்போல் பணக்காரர்கள் எல்லோரும் கெட்டவர்கள். என்ற, வசந்தபாலனின் சித்தாந்தப்படி கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் ஏகப்பட்ட கதாபாத்திர சிதைவுகள்.

இதற்கு, உதாரணமாக கதையின் மூல கதாபாத்திரங்களான, காளி வெங்கெட், சாந்தா தனஞ்ஜெயன் ஆகியோரது கதாபாத்திரங்களை சொல்லலாம். ஃப்ளாஷ் பேக் காட்சியில் வரும் காளி வெங்கெட்டின் கதாபாத்திரம் மீது பரிதாபம் ஏற்பட வேண்டும் என்று, நம்பகத் தன்மையற்ற விஷயங்கள் வலிய திணிக்கப்படுகிறது. அதாவது, கான்வென்டில் படிக்கும் தனது மகனுக்கு 50 ரூபாய் சாக்லெட் வாங்கிக் கொடுக்க முடியவில்லை? இந்தக் காட்சியை தொடர்ந்து வரும், அடுத்தடுத்த காட்சிகளால் படம் பலவீனமடைகிறது.

அதேபோல் கொடுமைக்காரியாக சித்தரிக்கப்பட்ட சாந்தா தனஞ்ஜெயன், வேலைக்காரி துஷாரா விஜயனுக்கு பலகோடி மதிப்புள்ள, தனது வீட்டினை எப்படி, அவருக்கு எழுதி கொடுப்பார்!? சரியாக சித்தரிக்கப்படாத, இந்த கதாபாத்திரங்களால் மொத்தத் திரைக்கதையும், குழம்பி நிற்கிறது.

வர்க்க முரண்பாடு (பாட்டாளி) புரிதலின்றி, வசந்தபாலன் அவரும் குழம்பி, பார்வையாளர்களையும் குழப்பி இருக்கிறார்.

சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நாயகனாக நடித்திருக்கிறார், அர்ஜுன் தாஸ். சிறுவயதிலிருந்தே துயரத்தையும், இழப்பையும் அனுபவித்த ஒருவனின் வலியை, அழுத்தமாக பதிவு செய்கிறார். அதே சமயத்தில் துஷாரா விஜயனுடன் ஏற்பட்ட காதலுக்குப் பிறகு, சந்தோஷ மனநிலையை வெளிக்காட்டும் போதும், காதலி தன் மீது சுமத்தும் பலியை தங்கியபடி, துவண்டு நிற்கும் இடத்திலும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார். இதன் மூலம் காதல் செய்து ஆடிப்பாடவும் முடியும் என நிரூபித்து இருக்கிறார்.

நாயகி துஷாரா விஜயன். நம்மிடம் நெருங்கிப் பழகிய பெண் போல், கதாபாத்திரத்திற்கேற்றபடி நடித்துள்ளார்.

இயக்குநர் விருப்பப்படி காளி வெங்கட், வட்டார பாஷை பேசி அசத்தலாக நடித்திருக்கிறார்.

மற்றபடி, சாந்தா தனஞ்ஜெயன், வனிதா விஜயகுமார், அர்ஜுன் சிதம்பரம் கதாபாத்திரங்களுக்கேற்றபடி நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எட்வின் சாகேவின் ஒளிப்பதிவு சிறப்பு.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் தேறவில்லை! பின்னணி இசை குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை.

மொத்தத்தில், இயக்குநர் வசந்தபாலன் நம்பி வந்த ரசிகர்களுக்கு அநீதி இழைத்துள்ளார்.